ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப வறுமையால் விஷம் கொடுத்து சிறுவன் கொலை: மேலும் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப வறுமையால் 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றார். இதில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் வீரமாரியப்பன். இவரது மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு பால விசாலினி (11),நிதி (10), அபி பாலன்(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். லாரி ஓட்டுநராக வேலை பார்த்த வீரமாரியப்பன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் பசுவந்தனை பகுதியில் உணவகம் தொடங்குவதற்காக வாடகைக்கு கடை பிடித்தார். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் உணவகம் தொடங்க வழியின்றியும், வேலைக்கும் செல்ல முடியாமலும் இருந்த வீர மாரியப்பன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, நேற்று முன்தினம் தனது 3 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து பின்னர் தானும் குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபிபாலன் உயிரிழந்தார். இதையடுத்து மகாலட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்து, பசுவந்தனை இன்ஸ்பெக்டர் மணிமொழி விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
