

காதல் திருமணம் செய்து கொண்ட போலீஸ் கணவர் சாலை விபத்தில் பலியான நிலையில் இரு தரப்பு பெற்றோரும் கைவிட்டதால் உதவிகேட்டு முதல்வர் தனிப் பிரிவில் இளம்பெண் நேற்று மனு அளித்தார்.
இது தொடர்பாக எஸ்.விஜய லட்சுமி நிருபர்களிடம் கூறிய தாவது:
எனது கணவர் சாமி. சரவணன், பெரம்பலூர் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு தியா ஸ்ரீ (4), வினியா ஸ்ரீ (2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பும்போது, சாலை விபத்தில் என் கணவர் மரணமடைந்தார்.
என் கணவர் இறந்தபின் அரசிடம் இருந்து எந்த ஒரு பணப்பயனோ, முதல்வர் நிவாரண நிதியோ கிடைக்க வில்லை. அதன்பின் இறந்த பலருக்கும் அரசிடம் இருந்து நிதி உதவிகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் நாங்கள் வசித்து வரும் காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு கேட்டு வருகிறார்கள்.
இரண்டு பெண் குழந்தைகளை யும் எப்படி காப்பாற்றுவது என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் முதல்வர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் எங்களை இருதரப்பு பெற்றோர் களும், உறவினர்களும் ஆதரிக்க வில்லை. கணவனை இழந்த எனக்கு அரசு வேலை கொடுத் தால் குழந்தைகளை வளர்க்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.