

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு முன்னதாகவே வி.என்.சுதாகரனும், இளவரசியும் விடுதலையாகலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நரசிம்மமூர்த்தி என்பவரின் தகவலறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு, 2021 ஜனவரி 27-ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பிருப்பதாக எழுத்துபூர்வமாக தெரிவித்திருக்கிறார் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக் கண்காணிப்பாளர். அதேசமயம், சசிகலாவுக்கு முன்னதாக வி.என்.சுதாகரனும் அவரைத் தொடர்ந்து இளவரசியும் விடுதலையாகக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், சசிகலா விடுதலை குறித்து அவரது தரப்புக்கு நெருக்கமானவர்கள் 'இந்து தமிழ் திசை'யிடம் பேசுகையில், “கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொள்ளும் கைதிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் தண்டனைக் குறைப்பு உண்டு. இதில்லாமல், சிறைத்துறை ஐஜியும் தனியாக 7 நாட்கள் தண்டனைக் குறைப்பு வழங்க சிறைத்துறை விதிகள் அனுமதிக்கின்றன.
சிறைக் கைதிகளைப் போராடத் தூண்டுதல், சிறைக்குள் உண்ணாவிரதம் இருத்தல் இவையெல்லாம் நன்னடத்தை இல்லாத செயலாகக் கர்நாடக சிறைத்துறை கணக்கில் கொள்ளும். இதுமாதிரியான காரியங்கள் எதிலும் சசிகலா ஈடுபடவில்லை. மேலும், சிறைக்குள் சசிகலா கன்னடம் கற்றிருக்கிறார். சிறை நிர்வாகம் தந்த வேலையைச் செய்திருக்கிறார். இதெல்லாமே நன்னடத்தையாக கணக்கில் கொள்ளப்படும். இதையெல்லாம் கணக்கில் கொண்டால் சசிகலா இந்நேரம் தண்டனைக் குறைப்பு பெற்று விடுதலையாகி இருக்க வேண்டும்.
இதை எதிர்பார்த்துத்தான் கடந்த ஜனவரி மாதமே சசிகலாவின் வங்கிக் கணக்கிற்கு அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விடுதலைத் தேதி நெருங்கும் போதுதான், அபராதத் தொகையை செலுத்துகிறீர்களா அல்லது கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவிக்கின்றீர்களா என்ற கேள்வியைச் சிறை நிர்வாகம் எழுப்பும். அந்த சமயத்தில் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று அவர்களின் வழிகாட்டல்படி அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும்.
அந்த வகையில், சசிகலாவுக்கு முன்னதாகவே வி.என்.சுதாகரன் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது. தண்டனை வழங்கப்படுவதற்கு முன் சுதாகரன் 126 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அதன் பிறகுதான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. எனவே, அந்த 126 நாட்களைக் கழித்தால் எந்தச் சலுகையும் வழங்கப்படாவிட்டாலும் நவம்பர் மாதமே சுதாகரன் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது. இதைக் கணக்கில் கொண்டு, சுதாகரனின் வழக்கறிஞர் கடந்த வாரமே கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடி அபராதத்தைச் செலுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டார். சுதாகரனைத் தொடர்ந்து இளவரசியும் விடுதலையாவார். அதன் பிறகு இறுதியாகத்தான் சசிகலா விடுதலையாக முடியும்” என்றனர்.
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, “சசிகலாவுக்கு எந்தவிதமான சலுகைகளும் தரப்படாமல் முழுமையாக நான்கு ஆண்டுகள் தண்டனையைப் பூர்த்தி செய்தால் 2021 பிப்ரவரி 14-ல் அவர் விடுதலையாக வேண்டும். அதற்கு மேல் ஒரு நாள்கூட அவரைச் சிறையில் வைத்திருக்க முடியாது.
அதேநேரத்தில், சசிகலா தண்டனை அளிக்கப்படும் முன்பாக ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக 35 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். தண்டனை பெற்ற பிறகு இரண்டு கட்டங்களாக 17 நாட்கள் பரோலில் வந்திருக்கிறார். ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்களில் இந்த 17 நாட்களைக் கழித்தால் 18 நாட்கள் உள்ளன. 2021 பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து இந்த 18 நாட்களைக் கழித்தால் 2021 ஜனவரி 27-ல் அவர் விடுதலையாக வேண்டும். இதைத்தான் ஆர்டிஐ மனுவுக்கான பதிலாகத் தந்திருக்கிறது கர்நாடக சிறைத்துறை.
இது மனுவுக்கான உத்தேச பதில்தானே தவிர இதுதான் துல்லியமான தேதி என்று சொல்லிவிடமுடியாது. சிறையில் சசிகலாவுக்கு தண்டனைக் காலத்தில் அளிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் கணக்கில் கொண்டால் அநேகமாக இந்த மாத இறுதியிலேயே அவர் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது. அப்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.