

உலககையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற சுயக்கட்டுப்பாடு முக்கியம் என, இந்த வைரஸ் நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறது.
கரோனாவைத் தடுக்க இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
இருப்பினும், உறுதியான பயன்பாட்டுக்கு வரவில்லை. பெரும்பாலும் நுரையீரல் பகுதியை அதிகம் தாக்கும் இந்த வைரஸை நமக்கு த்தெரிந்த மூச்சுப் பயிற்சி (பிராணயாமா) மூலம் வென்றெடுக்கலாம் என்கிறார் மதுரை தியாகராசர் கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குநர் ஆர்.செல்வக்குமார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: யமா- குணம்,தன்மை, நியமா- நடத்தை விதி, ஆசனா- அங்கஸ்ததி, பிராணயாமா- மூச்சுப் பயிற்சி, ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துதல், தாரணா- ஒருமுகப்படுத்துதல், தியானம்- ஒருமுக சிந்தனை, சமாதி- தன்னை உணர்தல் என, யோகாவில் 8 வகை உண்டு. இந்த யோகா நிலையை ஒன்றன்பின், ஒன்றாக பயிற்சி பெற்ற பின்னரே இதன் முழுமையை அடைய முடியும். கரோனா வைரஸிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள பிராணயாமா பயிற்சி மிகச் சிறந்த ஒன்று.
கடந்த வாரம் எனது நண்பர், ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார். அது பற்றி மருத்துவர் நண்பரிடம் கேட்டபோது, 2 முதல் 3 நாள் சரியாக சாப்பிடாமல் இருத்தல், நீண்ட நேரம் தூங்குவது, ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மரணச்சூழல் ஏற்படும் என்றார். இதன்மூலம் ஆக்சிஜன் குறைவாக இருந்தால் நுரையீரலில் ரத்தத்தில் நுகரப்படுவது முக்கிய காரணம் என, தெரிந்து கொண்டேன்.
பொதுவாக நாம் காற்றை உள்ளே இழுக்கும்போது, 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன், 1 சதவீதம் பிறவாயு நுரையீரலைச் சென்றடைகிறது. மூச்சை வெளியிடும்போது, 78 சதவீதம் நைட்ரஜன், 17 சதவீத ஆக்சிஜன், 1 சதவீத பிற வாயு, 4 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு நுரையீரலிருந்து வெளியேறுகிறது. இதில் 4 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே நுரையீரலிலுள்ள அல்வோலிகள் ( நுரையீரலில் இருந்து ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்ல உதவும் சிறு துளைகள்) நுகரப்பட்டு 4 சதவீதம் கார்பன் டை ஆக்சைடாக வெளியேறும்.
பிராணயாமா பயிற்சியில் ஈடுபடும்போது, மூச்சு உள்ளே இழுத்தல், அடக்குதல், விடுதல் மூலம் நுரையீரல் முழு காற்றின் கொள்ளளவை அடைகிறது. அல்வோலிகள் மூலம் ரத்தம் சுத்தமாவது அதிகரிக்கும். மூச்சை உள்ளே அடக்குவதால் ஆக்சிஜன் அதிகளவு நுகரப்படுகிறது. மேலும், நுரையீரல், அல்வோலியை சுற்றி திரவம் ஏற்படாமல் காக்கப்பட்டு நுரையீரல் இயக்கப்படுகிறது.
பிராணயாமா பயிற்சி தொடர்ந்து செய்தால் நன்மை கிடைக்கும் எனது அனுபவ பூர்வமான உண்மை. வலது மூக்கில் சூடான காற்றும், இடது மூக்கில் குளுமையான காற்றும் தென்படும். சூடான காற்றை உள்ளே இழுத்து, இடது மூக்கு வழியாக வெளி யேற்றினால் நுரையீரல் பகுதியிலுள்ள குளுமை காற்று வெளியேறும். மூச்சு வாங்குவது தவிர்க்கப்படலாம்.
அதிகாலை, மாலை நேரங்களில் பிராணயாமா பயிற்சி அனைத்து வயதினரும் செய்யலாம். குறிப்பாக நடைபயிற்சி செய்ய இயலாதவர்கள் முழங்கால் வலியுள்ளவர்கள், முதியவர்கள் பிராணயாமா பயிற்சியை வீட்டில் இருந்தே செய்யலாம்.
தூங்கும்போது, குப்புறப்படுத்து தூங்கினால் நுரையீரல், அல்வோலியின் (சிறுதுளைகள்)இயக்கத்தை சீரமைக்கலாம். நுரையீரலை குறி வைத்து தாக்கும் கரோனாவில் நம்மைபாதுகாக்க பிராணயாமா பயிற்சி உதவும்
இவ்வாறு அவர் கூறினார்.