இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை என்பதற்கு நானே எடுத்துக்காட்டு: அன்புமணி ராமதாஸ் பேச்சு

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை என்பதற்கு நானே எடுத்துக்காட்டு: அன்புமணி ராமதாஸ் பேச்சு
Updated on
3 min read

இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். அப்படி அவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை ஏற்படும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் இணையவழிக் கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மாறி வரும் சூழலில் உயர் கல்வியில் அடுத்த தலைமுறைக்கான கல்வி முறையைக் கட்டமைப்பது குறித்து 2021 பிப்ரவரியில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்றத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கருத்தரங்கில் உலக அளவிலான துணைவேந்தர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் 250 பேர் தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துப் பேசவிருக்கிறார்கள். இது தொடர்பாக, தமிழக துணை வேந்தர்கள், மற்றும் பன்னாட்டுக் கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் காணொலி வழி ஆலோசனைக் கூட்டங்கள் உலகத் தழிழ் வம்சாவளி அமைப்பால் வாராவாரம் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 6 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு ஏழாவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

காணொலி வழியே நடந்த இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜெ.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் இணைப்புரை வழங்கினார். நிகழ்வில், பப்புவா நியூ கினியா அமைச்சர் சசிந்திரன் முத்துவேல், இலங்கை எம்.பி.யும், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ராஜ் பேட்டர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சசிந்திரன் முத்துவேல் தனது கருத்துரையில், “அரசியல் குறித்து நம்மில் பெரும்பாலானவர்கள் மத்தியில் தவறான கருத்துகளே நிலவுகின்றன. இளைஞர்களில் பலரும் அரசியலைப் பற்றி எதிர்மறைக் கருத்துகளையே உள்வாங்கி இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் மாணவப் பருவத்திலேயே போதிக்கப்பட வேண்டியது அரசியல். அரசியல் புனிதமானது என்பதை எதிர்கால இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும். முந்தைய காலத்தில் அரசியலைப் புனிதமாக நினைத்த தலைவர்களின் தியாகத்தால்தான் இன்றைக்கு நாம் சுதந்திரம் பெற்று முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, வளரும் மாணவர்களுக்கு அரசியலைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும்” என்றார்.

சசிந்திரன் முத்துவேல்
சசிந்திரன் முத்துவேல்

எம்.பி. சுரேன் ராகவன் தனது உரையில், “இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை கல்வியின் முக்கியத்துவத்தை அதிகம் விரும்பக் கூடியவர்கள். அந்தக் கல்வியானது எங்கள் தமிழ் மொழிக் கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், எங்கள் தமிழ் மொழியை நாங்கள் கடவுளுக்கும் ஒருபடி அதிகமாகவே நேசிக்கின்றோம். காரணம், உலகிலேயே தமிழ் மொழிதான் மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்பு மிகுந்த மொழி.

உலகத்தில் தோன்றிய பல மொழிகள் அழிந்துகொண்டு வருகின்றன. குறிப்பாக, ஏசுநாதர் பேசிய மொழி இன்றைக்கு இல்லை. அதற்குக் காரணம், அந்த மொழியைப் பேசுவதைக் குறைத்துக் கொண்டதால் அந்த மொழி அழிந்து போய்விட்டது. எனவே, ஒரு மொழி அழியாமல் வாழ வேண்டும் என்றால் அந்த மொழி பேச்சு மொழியாக இருக்க வேண்டும். அந்த வகையில் உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிற சிறப்பான மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது. அப்படிப்பட்ட தொன்மை மிகுந்த தமிழ் மொழியும், தமிழ்க் கலாச்சாரமும் கல்வியில் முக்கியக் கூறாக இருக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் விரும்புகிறார்கள், இலங்கைத் தமிழர்களும் அதையே விரும்புகிறோம்” என்றார்.

எம்.பி. சுரேன் ராகவன்
எம்.பி. சுரேன் ராகவன்

கனடாவைச் சேர்ந்த ராஜ் பேட்டர்சன் பேசுகையில், “அரசியல் மிகவும் முக்கியமானது. அத்தகைய அரசியலானது அனைவரும் பங்கேற்கும் வகையில் இருக்க வேண்டும். பலபேர் விமர்சனங்களுக்குப் பயந்து, அரசியலுக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள், குறிப்பாக, பெண்கள். பெண் கல்வியும், பெண்களின் அரசியலும்தான் ஒரு நாட்டின் பெரும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

எனவே, அரசியல் குறித்து மாணவப் பருவத்திலிருந்து பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, மாணவர்கள் நாடாளுமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். அங்கே நேரடியாக அரசியல் செயல்பாடுகளைப் பார்க்கின்ற பொழுது அவர்கள் உற்சாகமடைந்து, அரசியலில் நாட்டம் ஏற்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களாக உருவெடுக்க அது உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.

நிறைவாக அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “உலகமே கரோனா அச்சத்தில் இருந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலில் காணொலி வழி சந்திப்பானது மிக முக்கியமாகிறது. கரோனா தொற்று நோயிலிருந்து அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். அச்சம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம். எனவே அனைவரும் விழிப்போடும் பாதுகாப்போடும் இருக்கும்படி ஒரு மருத்துவராகக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தொழில்துறை பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்ததல்ல, உண்மையான வளர்ச்சி அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சி, பெண்களின் கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றைச் சார்ந்தது. நமது இந்தியா அப்படி மகிழ்ச்சியாக இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே. இன்று அரசியலைப் பற்றி இளைஞர்களிடத்தில் முழுமையான விழிப்புணர்வு இல்லை. காரணம், இன்றைக்கு நல்ல தலைவர்கள் இல்லை.

அன்றைக்குக் காமராசர், அண்ணா போன்ற சிறந்த தலைவர்கள் இருந்தனர். இன்றைக்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் நாங்கள் காமராசர் ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்கிறார்கள். எனவே, ஊழலற்ற ஆட்சி தந்த காமராசரைப் போன்றவர்கள் அரசியலில் வரவேண்டுமானால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் வர வேண்டும். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி இளைஞர்கள் ஒதுங்கிச் செல்லக்கூடாது. அதைச் சுத்தப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் நல்லது நடக்கும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஒரு இயக்கமாக இருந்து புகைப்பிடித்தலை எதிர்த்தும், மது அருந்துதலைத் தடுக்கவும் போராடி வந்தோம். அதைத் தாண்டி நம்மால் வேறு செய்ய முடியாத நிலையில் இருந்தோம். ஆனால், அதே அரசியலில் அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரே கையெழுத்தில் நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்பதைச் சட்டமாக நடைமுறைப்படுத்த முடிந்தது.

இன்னும் பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம், எனவே, இப்படிப்பட்ட மாற்றங்கள் வர வேண்டுமானால் அரசியல் பாடத்திட்டத்தைக் கல்வியில் சேர்க்க வேண்டும்; அதிகமாகச் சேர்க்க வேண்டும். அதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரமுடியும்” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் கனடா நாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆலன்தீன் மணியன் நன்றியுரை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in