

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையில் தெரியவரும் உண்மைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புக் கொள்ளும்படி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு சிக்கல்கள் பற்றி பேசவுள்ளார்.
இலங்கையின் பிரதமர் என்ற முறையில் தமது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வதில் இருந்தே, இந்தப் பயணம் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், அங்கு இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள மேல் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும்படி இந்தியப் பிரதமரிடம் முறையிடுவதைத் தவிர விக்ரமசிங்கேவின் பயணத்துக்கு வேறு நோக்கம் இல்லை.
இலங்கை இறுதி போரின் போது அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்து நடத்தப்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் பன்னாட்டு விசாரணை குறித்த அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.
தொடர்ந்து வரும் 30ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் அதிகாரபூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் சிங்களப்படையினர் ஈடுபட்டது குறித்து அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களுடன் அந்த அறிக்கை அமைந்திருப்பதாக ஐ.நா.மனித உரிமை ஆணையர் அல் உசைன் கூறியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும், போர்க் குற்றங்களுக்கு காரணமானோரை பன்னாட்டு நீதிமன்ற கூண்டுகளில் ஏற்றி தண்டிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு புலன்விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த அமெரிக்கா, இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு புலன் விசாரணை மீதான நீதி விசாரணையை இலங்கையே நடத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், எதிர்ப்பாளர்களை சமரசம் செய்வதற்காக இலங்கைப் படைகள் மீதான் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கையே நீதிமன்ற விசாரணை நடத்தும்; ஆனால், அந்த விசாரணையை ஐ.நா. கண்காணிக்கும் என்ற உப்புசப்பு இல்லாத கூடுதல் கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்த கோரிக்கையை உள்ளடக்கிய தீர்மானத்தின் வரைவு நகலை வரும் 17 ஆம் தேதி அமெரிக்கா வெளியிடவுள்ளது. இத்தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை பேரவையில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இலங்கை மீது உலக நாடுகளின் கண்காணிப்பு மிகச்சிறிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தக் குறுக்கீட்டைக் கூட இலங்கை விரும்பவில்லை. அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திலிருந்து ஐ.நா. கண்காணிப்பு என்ற வாசகத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காகவே ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு வந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
இலங்கையின் இந்த கோரிக்கையை இந்தியா ஏற்கக் கூடாது. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரும் கடமையும், பொறுப்பும் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது.
எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையில் தெரியவரும் உண்மைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புக் கொள்ளும்படி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். மேலும், இதற்கான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அப்படகுகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்தியா - இலங்கை இடையிலான வங்கக்கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் எந்த பிரச்சினையும் இன்றி மீன் பிடிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமரிடம் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.