

இலங்கைத் தமிழர் மோகன் மரணம் அடைந்தது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேடவாக்கம் சவுமியா நகரில் வசித்தவர் மோகன் (42). இலங்கைத் தமிழர். போலி பாஸ்போர்ட் தொடர்பாக விசாரிப்பதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இவரை சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து அவரை பள்ளிக்கரணை போலீஸாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர். கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் இருந்த மோகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் வித்யா முன்னிலையில் 5-ம் தேதி மோகன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம், தானே முன்வந்து இதை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தமிழர் மோகன், போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது கடும் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் தெரிகிறது. அவரை போலீஸார் 3 நாட்களுக்கு மேலாக சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்ததாகவும் தெரிகிறது.
போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் மரணம் அடைந்தால், அவர் இறந்த 24 மணி நேரத்துக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மோகன் மரணம் குறித்து ஆணையத்திடம் தமிழக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
எனவே, இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் 4 வாரத்துக்குள் விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.