

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
நன்னடத்தை அடிப்படையில் நீண்ட நாள் சிறைவாசிகளை அரசு விடுதலை செய்வது வழக்கம். அந்தவகையில், "முஸ்லிம்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (செப். 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மரக்கடை மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சேக் முகம்மது அன்சாரி கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு
முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ப.உதுமான் அலி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் அஷ்ரப் அலி (தமுமுக), இப்ராகிம் (மமக), மாவட்டப் பொருளாளர் நூர்தீன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.