

‘திருமாலின் பெயர்கள் 1000’ என்ற ஆடல், பாடல் நிகழ்ச்சி ஜெயதாரிணி அறக்கட்டளை சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. ‘தி இந்து’வின் ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழ் சார்பில் நடத்தப் பட்ட விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்லோகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இதில் பரிசு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சி பற்றி ஜெயதாரிணி அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் கே.பத்மநாபன் கூறியதாவது: ஜெயதாரிணி அறக் கட்டளையின் 11-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘திருமாலின் பெயர்கள் 1000’ (தமிழில் விஷ்ணு சகஸ்ரநாமம்) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஸ்ரீசரஸ்வதி நாட்டியாலயா இயக்குநர் நிருத்ய ஆச்சார்யா சுகுணாவர்மா, ஸ்ரீஅன்னை நாட்டியாலயா இயக்குநர் காயத்ரி ஆகியோர் இதை வடிவமைத்துள்ளனர். 3 பிரபல கலைஞர்களுடன் இணைந்து 21 நடனக் கலைஞர்கள் வழங்கு கின்றனர். வண்ணமிகு ஒளி மற்றும் இசைப் பின்னணியுடன் இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
இதில் உள்ள 172 பாடல்கள் 45 ராகங்களில் தமிழ்த் தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்த ஆல்பத் துக்கு ‘திருமாலின் பெயர்கள் 1000’ என்று பெயரிடப்பட்டது. இதில் 67 பாடல்களை பத்மஜா பத்மநாபன் ராகமாலிகா வடிவில் பாடியுள்ளார். வி.வி.பிரசன்னா, அட்சய் பத்மநாபன், துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோரும் பாடியுள்ளனர்.
விஷ்ணு சகஸ்ரநாமம் தமிழ்ப் படைப்பை இசை ஆல்பமாக வழங்கியதற்காக ‘எச்எம்வி’ ரகு எனப்படும் கே.எஸ்.ரகுநாதனுக்கு இந்நிகழ்ச்சியின்போது ‘ஜயரத்னா’ விருது வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கே.பத்மநாபன் கூறியுள்ளார்.
முன்னதாக ஜெயதாரிணி அறக்கட்டளை மற்றும் ‘தி இந்து’வின் ஆன்மிக இணைப் பிதழான ‘ஆனந்தஜோதி’ இணைந்து விஷ்ணு சகஸ்ரநாம ஸ்லோகப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 4 பேருக்கு இந்நிகழ்ச்சியில் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்றவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டுரசிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.