Published : 09 Sep 2020 19:05 pm

Updated : 09 Sep 2020 19:05 pm

 

Published : 09 Sep 2020 07:05 PM
Last Updated : 09 Sep 2020 07:05 PM

திராவிட இயக்க அரசியல் இல்லை என்றால் தமிழை மாற்று மொழிக்கு இரையாக்குகின்ற பணிகள்தான் நடந்திருக்கும்!- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வைகைச்செல்வன் பதில்

if-it-was-not-for-the-politics-of-the-dravidian-movement-only-the-work-of-preying-on-tamil-as-an-alternative-language-would-have-taken-place-vaigai-selvan
பொன்.ராதாகிருஷ்ணன், வைகைச்செல்வன்

“தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இந்தியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால், 60 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சியில் இந்தியை மட்டுமல்ல தமிழையும் சேர்த்து ஒழித்து இரட்டைக் கொலை செய்திருக்கிறார்கள்” - திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படிச் சொன்னார். இதை அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கடுமையாக மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய வைகைச்செல்வன், “கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்க அரசியலில்தான் தமிழ் மொழியானது மிக உன்னதமான உயரத்தைத் தொட்டிருக்கிறது. சீர்திருத்தத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது, எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. இவை எல்லாமே திராவிட இயக்க அரசியல்தான்.


அதுபோல, மூன்று உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியது திராவிட இயக்க அரசியல்தான். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உலகத் தமிழ்ச் சங்கமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் உதித்தது. முதன்முதலில் மொழிக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவானது தமிழ்நாட்டில்தான். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது நான்காம் தமிழையும் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இப்படி எண்ணற்ற பணிகளைத் திராவிட இயக்க அரசியல் சாதித்திருக்கிறது.

உலக இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தது, தமிழாய்ந்த தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தது, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தது உள்ளிட்டவையும் திராவிட இயக்க அரசியலால் நாம் கண்ட பலன்தான். தமிழனுக்குச் சுயமரியாதையைத் தந்ததும், இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு நின்றவர்களை தோளில் துண்டுபோட வைத்ததும் திராவிட இயக்க அரசியல்தான். இவ்வளவு ஏன்... துணிச்சலுடன் கேள்விகளைக் கேட்கலாம், துணிச்சலுடன் எதிர்த்து நிற்கலாம் என்பதை இன்றைக்குக் கேள்வி எழுப்பி இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே பெற்றுத் தந்ததும் திராவிட இயக்க அரசியல்தான்.

ஒரு காலத்தில் அபேஷியர்கள், நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை வேட்பாளர்கள், வணக்கம் என்று சொல்ல வைத்ததும், கணவரை ஸ்வாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை தலைவன் என்றும் தலைவி என்றும் சொல்ல வைத்ததும் திராவிட இயக்க அரசியல் தந்த மாற்றம்தான். தமிழுக்குச் செம்மொழி, இலக்கிய மொழி அங்கீகாரத்தைத் தந்ததும் திராவிட இயக்க அரசியலே.

இப்படி நமது சமூகப் பண்பாட்டுக்கும், மறுமலர்ச்சிக்கும் அடித்தளமிட்டதே 60 ஆண்டு காலத் திராவிட இயக்க அரசியல்தான். திராவிட இயக்க அரசியல் இல்லை என்று சொன்னால் தமிழை மாற்று மொழிக்கு இரையாக்குகின்ற பணிகள்தான் நடந்திருக்கும். அது மாத்திரமல்ல... பண்ணையார்கள், பிரபுக்கள், சட்டம் படித்த மேதைகள், பஸ் முதலாளிகள் என செல்வந்தர்கள் மாத்திரமே அரசியலுக்கு வரமுடியும், அவர்கள் மாத்திரமே சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்ல முடியும், அவர்கள் மட்டுமே அமைச்சர்களாக அதிகாரம் செலுத்த முடியும் என்ற நிலையே இன்னமும் தொடர்ந்திருக்கும்.

அந்த நிலையை மாற்றி, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பாமரரும், எளியவரும், சாமானியரும் மக்கள மன்றத்துக்குச் செல்லமுடியும், அவர்களும் அமைச்சராக வரமுடியும் என்ற நிலையை நமக்குத் தந்தது திராவிட இயக்க அரசியல்தான் என்பதைப் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது” என்றார்.

‘இந்தி தெரியாது போடா’என்ற டி-ஷர்ட் ட்ரெண்டிங் குறித்துக் கேட்டதற்கு, “அண்ணா இருந்தவரை திமுக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம், அவர் கொண்ட கொள்கையில், லட்சியத்தில் தடம் மாறாது பயணித்தார். அனைத்துக்கும் அப்பாற்பட்டவராக நேர்மைத் திறத்தோடு பணியாற்றினார். ஆனால், அவருக்குப் பிறகு தலைமைப் பதவிக்கு வந்த கருணாநிதி, சூழ்நிலைக்குத் தக்கவாறு முடிவுகளை எடுக்க ஆரம்பித்தார். அதனாலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தவறான முடிவுகளை எடுத்த காரணத்தாலும் திமுக தனது பாதையை விட்டு விலகி கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது.

‘தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கி இருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு, ‘அவருக்கு இந்தி தெரியும்’ என்று சொன்னவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர்கள்தான் இன்று பனியன் போட்டு பந்தா காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் வைகைச்செல்வன்.


தவறவிடாதீர்!

வைகைச் செல்வன்Vaigai SelvanDravidian movementAlternative languageதிராவிட இயக்க அரசியல்மாற்று மொழிபொன்னார்பொன்.ராதாகிருஷ்ணன்திராவிட இயக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author