

புதுச்சேரியில் இன்று புதிதாக 440 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 749 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 337 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 8) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 2,081 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 369, காரைக்காலில் 26, ஏனாமில் 42, மாஹேவில் 3 பேர் என மொத்தம் 440 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 10 பேர், ஏனாமில் 2 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.90 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 17 ஆயிரத்து 749 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,799 பேர், காரைக்காலில் 141 பேர், ஏனாமில் 116 பேர் என 3,056 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,498 பேர், காரைக்காலில் 63 பேர், ஏனாமில் 181 பேர், மாஹேவில் 33 பேர் என மொத்தம் 1,775 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,831 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று புதுச்சேரியில் 357 பேர், காரைக்காலில் 49 பேர், ஏனாமில் 32 பேர், மாஹேவில் 8 பேர் என மொத்தம் 446 பேர் குணமடைந்து வீடி திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 581 (70.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 85 ஆயிரத்து 906 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 66 ஆயிரத்து 500 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.