குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்தால் கரோனா கட்டுக்குள் வரும்; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
Updated on
1 min read

குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்தால் கரோனா தொற்று கட்டுக்குள் வரும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செப் 8) கூறும்போது, "சுகாதாரத்துறை மூலம் கடந்த ஒரு வாரம் அதிகமான கரோனா பரிசோதனை செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள 25 பகுதிகளில் தொடர்ந்து வீடு, வீடாக கரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, காரைக்காலில் நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நிரந்த ஊழியர்கள் மூலம் பயிற்சி அளித்து, ஒவ்வொரு பகுதியாக உமிழ்நீர் மாதிரி சேகரிக்க பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், சரியில்லாத வாகனங்களை பழுது பார்த்துவிட்டு, புதிய வாகனங்களும் வந்தபிறகு கரோனா பரிசோதனை பணியில் முழு முயற்சியுடன் பணியாற்ற முடியும்.

கரோனா பரிசோதனை செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். நாம் எந்த அளவு பரிசோதனை செய்தாலும் கூட 'நெகட்டிவ்' என்று வந்தவர்கள் மீண்டும் வெளியே சுற்றுகின்றனர்.

இதனால் அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் நாளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும். யாரையாவது தொட்டால் உடனே கைகளை கைக்கழுவுங்கள். குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்தால் தொற்று கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in