

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்காக தனி தையல் தொழில் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட உள்ளது.
சமூகநலத் துறையின் சார்பில் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 40 லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் சுமாா் ரூ.80 கோடி ஒதுக்கீட்டில் 4 இணை சீருடைகளை தைத்து அளிக்கும் பணியை இந்த சங்கம் மூலம் செய்து வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து தையல்தொழில் தெரிந்த திருநங்கைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு என்று தனியாக தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தை தொடங்க சமூகநலத் துறை முடிவு செய்துள்ளது
இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஓய்வூதியத் தொகை, சுய தொழில் தொடங்க கடன் உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு இருப்பதைப் போன்று திருநங்கைகளுக்கு தனியாக திருநங்கைகள் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக குறைந்தது 100 திருநங்கைகளை தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். தையல் தொழில் தெரிந்த திருநங்கைகளுக்கு போதிய பயிற்சி அளித்து இச்சங்கத்தில் இணைத்து கொள்வோம்.
இவர்களுக்கான தையல் இயந்திரம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர உள்ளோம். அதை தொடர்ந்து ஆண்டுதோறும் பள்ளி சீருடைகள் தைப்பதற்காக வரும் பணியை திருநங்கைகளுக்கு பிரித்து தருவோம். விரைவில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.