

கரோனா தாக்கத்தால் இரண்டாண்டுகள் மலர் சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஊரடங்கால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டு, ஆறு மாதத்துக்குப் பிறகு கொய்மலர் சாகுபடி பணியில் ஆர்வத்துடன் நீலகிரி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், லில்லியம், கார்னேசன், ஜெர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும், 3,000 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து மொட்டுகளாக அறுவடை செய்யும் கொய்மலர்கள், பெங்களூரு, கோவாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கரோனா பாதிப்பால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மலர்கள் அறுவடை செய்யப்படாமல் உள்ளன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கொய்மலர் உற்பத்தியாளர்கள் கூறும் போது, "பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பசுமைக் குடில்கள் அமைத்து, சாகுபடி செய்யப்பட்டு வந்த கொய்மலர்கள் விற்பனையில், கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்னதாகவே பாதிப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவுக்குப் பின், ரூ.20 கோடி மதிப்பிலான கொய்மலர்கள் சந்தைக்கு அனுப்ப முடியாமல் வீணாகின. இதனால், பல லட்சம் மதிப்பில் பூக்கள் அழுகி விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றனர்.
கரோனாவால் விழாக்கள் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த பூக்களைக் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆறு மாதத்திற்குப் பிறகு சில தளர்வுகளுடன் சுப காரியங்கள் மற்றும் போக்குவரத்துத் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் மலர் சாகுபடி பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாண்டுகளுக்கு மலர் சாகுபடியில் நஷ்டம்தான் என்கிறார், கார்னேசன் மலர் நாற்றுகள் உற்பத்தியாளர் புவனேஷ்.
அவர் கூறும் போது, "நீலகிரியில் 50 ஏக்கரில் 200 விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். பசுமைக் குடில் அமைத்தல், மலர் சாகுபடி செய்ய உபகரணங்கள் என ஒரு ஏக்கருக்கு ரூ.60 முதல் ரூ.65 லட்சம் செலவாகும்.
கார்னேசன் செடியில் 6 மாதங்களுக்குப் பின்னரே மலர்களைச் சாகுபடி செய்யலாம். ஒரு செடியிலிருந்து 2 ஆண்டுகள் மலர்களைச் சாகுபடி செய்யலாம். ஒரு நாற்றுக்கு 12 மலர்கள் சாகுபடி செய்யலாம்.
இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் கரோனாவால் பூக்கள் விற்பனையாகவில்லை. அவை வீணாகி விட்டன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தற்போதுதான் மலர் விற்பனை தொடங்கியுள்ளது. தற்போது, ஒரு பூ ரூ.4-க்கு விற்பனையாகிறது.
இனி வரும் காலங்களில் கார்னேசன் மலருக்கு அதிகபட்ச விலையாக ரூ.10தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் அசல் கிடைப்பதே கஷ்டம்.
கரோனாவின் தாக்கம் காரணமாக இரண்டாண்டுகளுக்கு மலர் சாகுபடியாளர்களுக்கு நஷ்டம்தான். மலர்களைப் பயிரிட்டுள்ளதால், அவற்றைச் சாகுபடி செய்தாக வேண்டும். கிடைக்கும் விலைக்கு மலர்களை விற்பனை செய்து தொழிலைத் தொடர வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.