25 ஆண்டுகளாக நகருக்குள் செயல்படும் மதுரை புறநகர் காவல் நிலையம்: குழப்பத்தில் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்கள்

25 ஆண்டுகளாக நகருக்குள் செயல்படும் மதுரை புறநகர் காவல் நிலையம்: குழப்பத்தில் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்கள்
Updated on
1 min read

25 ஆண்டுகளாக நகருக்குள் செயல்படும் மதுரை புறநகர் காவல் நிலையத்தால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியில் முக்கியமானது கருப்பாயூரணி. பெரியார் பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பிரபல கல்வி நிறுவனங்களும் இப்பகுதியில் செயல்படுவதால் குழந்தைகள் கல்விக்காக இப்பகுதியை பலர் தேர்ந்தெடுக்கின்ற னர்.

நிலத்தடி நீர் ஓரளவுக்கு இருப்பதால் இப்பகுதியிலுள்ள விளை நிலங்களும் மனைகளாக மாறுகின்றனர். இப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குற்றத் தடுப்புகளிலும் கவனம் செலுத்தும் கட்டாயம் உள்ளது.

ஆரம்பத்தில் கிராமமாக இருந்ததால் இவ்வூருக்கான காவல் நிலையம் 25 ஆண்டுக்கு முன்பு மதுரை ஆட்சியர் வளாகப் பகுதியில் செயல்பட்டது. மேலமடை, தாசில்தார் நகர், யாகப்பா நகர், வண்டியூர் போன்ற பகுதிகள் எல்லையாக இருந்தபோது, அண்ணாநகர் சுகுனா ஸ்டோர் அருகிலும், பிறகு தாசில்தார் நகரிலும் பல ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கியது.

சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த 2008-ல் பாண்டிகோயில் அருகே மாற்றப்பட்டது.

மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, மேலமடை, தாசில்தார், யாகப்பாநகர், வண்டியூர், சிவகங்கை சுற்றுச்சாலை சந்திப்புப் பகுதிகள் நகருக்குள் இணைந்ததால் இப்பகுதிகள் அண்ணாநகர் காவல் நிலையத்துடன் சேர்க்கப்பட்டன. புறநகர்ப் பகுதியில் செயல்பட்ட கருப்பாயூரணி காவல் நிலையம் மீண்டும் நகருக்குள் வந்தது.

இடையில் ஓரிரு ஆண்டு தவிர, தொடர்ந்து 25 ஆண்டுக்கு மேலாக இந்த காவல் நிலையம் நகர் பகுதிக்குள் இருந்து செயல்படுகிறது என்றாலும், தற்போது புகார்தாரர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குள் கருப்பாயூரணி எல்லைக்குள் இருப்பதால் ராயல் கார்டன், சுற்றுச்சாலை சந்திப்பு பகுதியில் நடக்கும் பல்வேறு குற்றச் செயல் போன்ற பல்வேறு புகார்களுக்கு மக்கள் அருகிலுள்ள கருப்பாயூரணி காவல் நிலையத்தை அணுகும்போது, முகவரி விவரம் தெரிந்தபின், அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

குழப்பம் தீர, கருப்பாயூரணி காவல் நிலையத்தை அதற்கான எல்லைக்குள் மாற்றவேண்டும் என்பது பொதுமக்கள், காவல்துறையினரின் எதிர்பார்ப்பு. அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கருப்பாயூரணி போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘ ஏறத்தாழ 25 ஆண்டுக்கு மேலாக மதுரை நகருக்குள் வாடகை கட்டிடத்தில் இயங்கிய இக்காவல் நிலையம் 12 ஆண்டுக்கு முன்பு சொந்த கட்டிடத்திற்கு மாறியது.

அண்ணாநகர் காவல் நிலைய எல்லை விரிவாக்கத்தால் மீண்டும் நகருக்குள் சென்றுள்ளது. புகார்தாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டாலும் வேறு வழி யில்லை. மீண்டும் சொந்த கட்டிடம் கட்டும்போது மாறலாம், ’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in