போலீஸ் சீருடை அணிந்த இளைஞர்கள் வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி: இல்லாத காவல் நிலையத்தின் பெயரை கூறி கைவரிசை

போலீஸ் சீருடை அணிந்த இளைஞர்கள் வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி: இல்லாத காவல் நிலையத்தின் பெயரை கூறி கைவரிசை
Updated on
1 min read

காவலர்கள் போல சீருடையில் வந்து, முட்டை வியாபாரியிடம் ரூ.2.25 லட்சத்தை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் முகமது வாசிம் (32). முட்டை வியாபாரம் செய்கிறார். இவர் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று முன்தினம் ரூ.10 ஆயிரம் செலுத்திவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சிருங்கேரி மடம் சாலையில் சென்றபோது, காக்கி சீருடையில் இருந்த 2 இளைஞர்கள் அவரை வழிமறித்துள்ளனர். ‘‘நாங்கள் மந்தைவெளி போலீஸ். உங்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது. எங்கிருந்து வருகிறீர்கள்? அடையாள அட்டை உள்ளதா?’’ என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ளனர். அவரை சோதனையிடவும் முயன்றனர். இதில் பயந்துபோன வாசிம், தன்னிடம் முட்டை வியாபாரப் பணம் ரூ.2.25 லட்சம் இருப்பதாக கூறி, அதை எடுத்துக் காண்பித்துள்ளார்.

அதை வாங்கிக் கொண்ட இளைஞர்கள், ‘‘பணத்துக்கான ஆவணங்களை மந்தைவெளி காவல் நிலையத்துக்கு வந்து காண்பித்து, பணத்தை பெற்றுச்செல்லுங்கள்’’ என்று கூறிவிட்டு, தயாராக இருந்த காரில் ஏறிச் சென்றனர்.

இதையடுத்து, வாசிம் மந்தைவெளி காவல் நிலையத்தை தேடியுள்ளார். சென்னையில் ‘மந்தைவெளி’ என்ற பெயரில் காவல் நிலையமே இல்லை என்பது அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அபிராமபுரம் காவல் நிலையம் சென்ற அவர், தன்னிடம் பணம் பறிக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in