புதுச்சேரியில் 12 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா; புதிதாக 511 பேர் தொற்றால் பாதிப்பு; மேலும் 10 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் இன்று (ஆக. 27) புதிதாக 511 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,434 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் இன்று கூறியதாவது:
''புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,486 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 461 பேர், காரைக்காலில் 31 பேர், ஏனாமில் 13 பேர், மாஹேவில் 6 பேர் என 511 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 8 பேர், ஏனாமில் 2 பேர் என 10 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர்.
கதிர்காமம் காமராஜர் வீதியைச் சேர்ந்த 48 வயதுப் பெண், சண்முகாபுரம் சுப்ரமணி கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயது முதியவர், முத்தியால்பேட்டை டிவி நகரைச் சேர்ந்த 42 வயதுப் பெண், முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 48 வயது ஆண் ஆகிய 4 பேர் ஜிப்மரிலும், அரியாங்குப்பம் பாண்டியன் வீதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, திருக்கனூர் காந்தி நகரைச் சேர்ந்த 44 வயது ஆண் ஆகிய இருவர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கரிக்கலாம்பாக்கம் வடக்கு புதுநகரைச் சேர்ந்த 47 வயதுப் பெண் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது. இதேபோல், முதலியார்பேட்டை விடுதலை நகரைச் சேர்ந்த 55 வயதுப் பெண் இறந்த நிலையில் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மேலும், ஏனாம் டோமேடி பேட்டா பகுதியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, ஏனாம் காமி செட்டி வீதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஆகிய இருவரும் ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.53 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 12,434 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,167 பேர், காரைக்காலில் 129 பேர், ஏனாமில் 60 பேர் என 2,356 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் 1,952 பேர், காரைக்காலில் 100 பேர், ஏனாமில் 62 பேர், மாஹேவில் 13 பேர் என மொத்தம் 2,127 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,483 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக, இன்று புதுச்சேரியில் 264 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 3 பேர் என மொத்தம் 275 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,761 (62.42 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 68 ஆயிரத்து 888 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 55 ஆயிரத்து 120 பரிசோதனைகள் முடிவில் நெகட்டிவ் என்று வந்துள்ளது''.
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.
