

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் விடுதிகளில் கரோனா தொற்றாளர்களைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஆக.25) கூறியதாவது:
"புதுச்சேரியில் தினமும் 1,200 முதல் 1,350 வரை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது தேவையான மருத்துவ உபகரணங்கள் வந்துவிட்டன. அவை காரைக்கால், மாஹே, ஏனாமுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்படும். 3 அல்லது 4 நாட்களில் தினமும் 2,500 முதல் 3,000 வரை பரிசோதனைகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால், பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு அதிகமாக வருகிறது என்று கூறுவார்கள். பரிசோதனையை அதிகப்படுத்துவதன் மூலம் 3 அல்லது 4 நாட்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதற்கு கூடுதலாகப் படுக்கைகள் தேவைப்படுகின்றன.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் மாணவர் விடுதி, மாணவிகள் விடுதி, எவ்வளவு படுக்கைகள் போட முடியும் என இன்று 2 மணி நேரம் ஆய்வு செய்தேன். அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது கூடுதலாக 100 படுக்கைகள் போட முடியும். மேலும், 150 செவிலியர்கள், 70 துப்புரவு ஊழியர்கள், 60 டெக்னீஷியன்கள் தேவைப்படுகின்றனர். குறிப்பாக, மாணவர் விடுதியில் 100 அறைகள் உள்ளன. ஒரு அறைக்கு 2 படுக்கைகள் வீதம் 200 படுக்கைகள் போட முடியும்.
தற்போது அங்கு 35 மாணவர்கள் தங்கி இருப்பதால், ஒரு தளத்தில் உள்ள 25 அறைகளை ஒதுக்கிவிடலாம். மீதமுள்ள 3 தளங்களில் இருக்கும் 75 அறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் மாணவிகள் விடுதியில் உள்ள அறைகளை 50 செவிலியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தனியார் உணவகங்களில் தங்க வைத்துவிட்டால், அங்கும் நோயாளிகளை அனுமதித்துச் சிகிச்சை அளிக்க முடியும். இதுபோன்ற யோசனைகளை சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநர்களிடம் கூறியுள்ளேன்.
பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறை, குளியலறை இல்லை. ஆனால், மாணவர் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளன. நமக்கு ஊழியர்கள் மட்டும் தேவைப்படுகின்றனர். தற்போது, தேவையான ஊழியர்களை நியமித்தால் சிறப்பாகச் செயல்பட முடியும். நிரந்தரமான 100 - 150 செவிலியர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும்.
வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு முதல்வரிடம் கூறினேன். அடுத்த வாரம் முதல் இதனை அமல்படுத்துவதாகக் கூறினார். மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் 2, 3 நாட்களுக்குப் பிறகு 800 பேர், 1,000 பேர் என தினமும் பாதிக்கப்படுவார்கள். புதுச்சேரி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் 15 நாட்களில் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்".
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.