

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 17-ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, அரசு எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் ஒரு சரித்திர சாதனை என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் (இணைய வழி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆற்றிய உரை:
“நாளைய உலகில் பல்வேறு துறைகளில் சாதிக்கப் பிறந்த மாணவச் செல்வங்களே!
கல்லூரி வாழ்க்கையில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல உலா வந்த உங்களுக்கு, இன்று முதல், இந்த உலகத்திற்கான உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டிய நேரம் தொடங்கி விட்டது.
"அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்கள் சேவைக்கான முழுமையான உணர்வுகளையும், சிறந்த தொழில் திறமைகளையும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அதனடிப்படையில், மாணவர்கள் பெற்ற கல்வியை சமூக நலனுக்குப் பயன்படுத்தவும், சமூகத்தின் அறிவுசார்ந்த நிலையை உயர்த்தவும் பல்கலைக்கழகங்கள்தான் உறுதுணையாக உள்ளன. இந்த நோக்கங்களின் அடிப்படையில்தான் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மாணாக்கர்களுக்குச் சிறந்த கல்வி அளித்து சிறந்த மருத்துவர்களாகவும் சிறந்த பொறியாளர்களாகவும், பிற துறை வல்லுநர்களாகவும் உங்களை உருவாக்கி வருகிறது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைத்து மாணாக்கர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"நலமான மாநிலமே, வளமான மாநிலம்" என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை மாணவச் செல்வங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
* கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 17-ல் இருந்து 16 ஆகவும், பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் 2030-ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை, நாம் எடுத்த பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளால் இப்போதே அடைந்து விட்டதும் ஒரு சரித்திர சாதனையாகும்.
* டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது, இந்த திட்டத்தின் வெற்றியைக் காட்டுகிறது.
* "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா மருந்தகம்" போன்ற பல முன்னோடி திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 5 வருடங்களாக தொடர்ந்து தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மருத்துவமனைக்கான விருது, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
* மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கைகளை தானமாக பெற்று, திண்டுக்கல்லைச் சார்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொருத்தி நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது.
* இந்த ஆட்சியில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.
* மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உட்பட 32,660 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் புற்று நோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் Linear Accelerator என்ற உயர் தொழில் நுட்பக் கருவி நிறுவப்பட்டு வருகிறது.
* சென்னை அடையாறு, புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது.
* காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேண்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
* உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது.
* வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், தரமான மருத்துவ சிகிச்சையைக் குறைந்த செலவில் பெறுவதற்காக, பலரும் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கையாகும். இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 700 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக, கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணாக்கர்களின் கனவை நனவாக்கியது இந்த அரசு.
அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என அரசு கொள்கை முடிவு எடுத்தது.
அதனடிப்படையில், தமிழக அரசு, மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளுக்கு உடனடியாக நான் அடிக்கல் நாட்டியுள்ளேன். தற்போது தமிழ்நாட்டிலுள்ள 3,250 மருத்துவப் படிப்பு இடங்களுடன், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 1,650 புதிய மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை சேர்த்து 2021-22 ஆம் ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க ஜெயலலிதாவின் அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில், "விழித்திருங்கள், விலகி இருங்கள், விதிமுறைகளை மதித்து இருங்கள்" எனும் எனது கனிவான வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டு மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதை நீங்களும் நானும் அறிவோம்.
நமது கூட்டு முயற்சியினால், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. இதற்காக மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள் எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டைப் பாராட்டி வருகின்றனர்.
மருத்துவத் துறையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள அனைத்து நவீன சிகிச்சைகளும், தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நவீன வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி வருவதால், அதிக அளவில் நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவேதான், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இந்தியாவில் உள்ள முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இன்றைக்கு பட்டம் பெற்று, பல்கலைக்கழகத்திலிருந்து, வெளிவரும் மாணாக்கர்களாகிய நீங்கள், இந்த உலகமே பயனடையும் வகையில் சாதனைகளை நிகழ்த்த, முதலில் சரியான இலக்கு மற்றும் அதை அடையக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வழிமுறைகளில் இடைவிடாது செயல்பட்டால் உங்களது லட்சியத்தை வெகு சுலபமாக அடைந்து, வெற்றி அடைய முடியும். வாழ்க்கையில் நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நாம் சரியான இலக்கை நிர்ணயித்து, பாதையை வகுத்து, சரியான திசையில் செல்லும் முடிவே பெரிய வெற்றியைத் தரும்.
ஒருவர் எவ்வளவுதான் திறமையானவராக இருப்பினும், வேகமாகச் செயல்படக் கூடியவராக இருப்பினும். சரியான பாதையில் செல்லவில்லை என்றால் அவர் அவரது இலக்கினை அடைவது இயலாத காரியமாகும்.
மாணாக்கர்களாகிய உங்கள் வாழ்விற்கு சரியான திசையைத் தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும். வெற்றிக்கு வேகமாக ஓடுவதைக் காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றி பெறும். திட்டமிடுங்கள்! உழையுங்கள், வெற்றி பெறுங்கள்.
இன்றைய தினம் மக்களின் நோயைப் போக்கும் புனிதப் பயணத்தைச் சிலரும், சிறந்த பொறியாளர்களாக வேண்டும் என்ற பயணத்தைச் சிலரும், பிற துறை வல்லுநர்களாக வேண்டும் என்ற பயணத்தைச் சிலரும் தொடங்குகிறீர்கள். இந்தத் தருணத்தில் உங்கள் மனதில் எழும் புனிதமான எண்ணங்கள், உங்கள் கரங்களுக்கும் இதயங்களுக்கும் வழிகாட்டியாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.