

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 412 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 பேர்உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 522 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 63.27 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.23) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,282 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 402, காரைக்காலில் 2, ஏனாமில் 8 என 412 பேருக்குத் (32.13 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பரிசோதனை செய்யப்பட்ட நூறு பேரில் 32 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரியில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வாணரப்பேட்டை காளியம்மன் கோயில் வீதியை சேர்ந்த 35 வயது ஆண் நபர் கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது.
முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த 55 வயது பெண் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், பங்கூர் கங்கையம்மன் கோயில் வீதியை சேர்ந்த 70 வயது முதியவர், சின்ன காலாப்பட்டு மேட்டு தெருவை சோ்ந்த 44 வயது ஆண் நபர், முருங்கப்பாக்கம் கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்த 66 வயது முதியவா், சாரம் கொசப்பாளையம் சுப்ரமணிய கோயில் தெருவை சேர்ந்த 76 வயது முதியவா் ஆகிய 4 பேரும் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
முத்தியால்பேட்டை சுப்ரமணிய கோயில் வீதியை சோ்ந்த 67 வயது முதியவர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
மேலும், காமராஜா் நகா் குமரேசன் வீதியை சோ்ந்த 63 முதியவா் பிற பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 10 ஆயிரத்து 522 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,904 பேர், காரைக்காலில் 147 பேர், ஏனாமில் 46 பேர் என 2,097 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,527 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 64 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 1,609 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,706 பேர் சிகிச்சையில்உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 288 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 26 பேர் என மொத்தம் 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,657 (63.27 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 63 ஆயிரத்து 590 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 51 ஆயிரம் 422 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.