

உசிலம்பட்டி அருகே அதிகாலையில் செங்கல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் நேருக்கு, நேர் மோதிய விபத்தில் மதுரை தனக்கன்குளம் தொழிலாளிகள் இருவர் மரணம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து செங்கல் கற்களை ஏற்றிக்கொண்டு உசிலம் பட்டி நோக்கி டிப்பர் லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்றது. அதே நேரத்தில் மற்றொரு லாரி உசிலம்பட்டியில் இருந்து அருகிலுள்ள வடுக பட்டிக்கு செங்கல் கற்கள் லோடுடன் சென்றது.
மதுரை ரோடு வடுகபட்டி விலக்கு அருகே இரு லாரிகளும் எதிர்பாராதவிதமாக அதிகாலையில் நேருக்கு, நேர் மோதியது. இந்த கோர விபத்தில் மதுரையில் இருந்து சென்ற லாரியின் முன்பக்கம் நொறுங்கியது.
செங்கல் கற்கள் ரோட்டில் சிதறின. இந்த லாரியில் தொழிலாளிகளாக இருந்த மதுரை தனக்கன்குளம் பால்பாண்டி(47), ராமர் (45), வினோத் (28), பேச்சி(37), சுரேஷ் (22) ஆகியோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உசிலம்பட்டி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உசிலம்பட்டி மருத்துவமனை யில் பால்பாண்டியும், மதுரை அரசு மருத்துவமனையில் ராமரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உசிலம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டது என, போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.