

விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடும் சூழல் தற்போது இல்லாத நிலையில், தெருவோரத்தில் விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி இன்று (ஆக.20) கூறியதாவது:
"தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறைந்தபட்சம் தலா 300 படுக்கைகள் கொடுக்க வேண்டும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதன் அடிப்படையில் தற்போது படிப்படியாக படுக்கைகளை கொடுத்து வருகின்றனர். ஆனால், வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மட்டும் தேவையான படுக்கைகளை கொடுக்கவில்லை என புகார் வந்தது.
அதன் அடிப்படையில் அந்த கல்லூரியை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் எடுத்துக் கொண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக மருத்துவம் அளிப்பதற்கு முடிவு செய்து, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்யும்போது அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.
இல்லையென்றால், மாநில அரசு தானாக முன்வந்து அந்த மருத்துவக் கல்லூரிகளை கையகப்படுத்தி அங்குள்ள படுக்கைகள் முழுவதையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக பாடுபடுகிறார்கள்.
எங்களால் முடிந்த வரை நானும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் மக்களுக்குப் பணி செய்து வருகிறோம். இந்த தருணத்தில் ஆளுநர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி மருத்துவக் குழுவை அனுப்புவதற்கு கோரிக்கை வைத்ததாக பத்திரிகையில் படித்தேன். மருத்துவக் குழு வருவதை பற்றி ஆட்சேபனை இல்லை. பல மாநிலங்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அவர்களது கருத்துகளை கேட்பதற்கு நமக்கு உரிமை உண்டு. அவர்கள் தேவையான அறிவுரைகளை மாநில அரசுக்குக் கொடுத்தால் அதன்படி நடந்து கொள்ள முடியும்.
மத்திய அரசுதான் இந்தியா முழுவதும் 2 மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவையும், 3 முறை தளர்வுகளையும் அறிவித்தது. மத்திய அரசின் விதிமுறைகளை நாம் முறையாக கடைபிடிக்கிறோம். ஆனால், புதுச்சேரி மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைவரும் ஒருங்கிணைந்து தொற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிற வேளையில், ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய அலுவலகத்தில் இருந்து உத்தரவு போட்டால் மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது.
குறிப்பாக, களத்தில் இறங்கி பணி செய்பவர்கள் தங்களது உயிரை துச்சமென நினைத்து பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் குறை சொல்வதை விட அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர குறை சொல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மட்டுமின்றி இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகிறோம். பல தெருக்களின் ஓரங்களில் இந்து அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் விநாயகர் சிலையை வைத்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தாண்டு அந்த சூழ்நிலை இல்லை. மத்திய அரசு தெளிவாக விதிமுறைகளை கொடுத்துள்ளது.
தெருவோரங்களில் விநாயகர் சிலை வைத்தால் மக்கள் கூடுவார்கள். அதனால் கரோனா தொற்றுப் பரவ வாய்ப்பு ஏற்படும். இது மத்திய அரசின் விதிமுறைகளை மீறியதாகும். ஆகவே தான் மாவட்ட ஆட்சியர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு அனைத்து அமைப்புகளையும் அழைத்து பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது, ஊர்வலங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒருசிலர் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தெருவோரத்தில் விநாயகர் சிலை வைத்து விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், தெருவோரத்தில் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளன. நான் புதுச்சேரி மக்களையும், இந்துக்களையும் கேட்டுக் கொள்வதெல்லாம் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள்.
கோயிலுக்குச் சென்று விநாயகரை தரிசித்துவிட்டு வாருங்கள். ஆனால், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்துக் கூட்டத்தைக் கூட்டி கரோனா தொற்றுப் பரவ காரணமாக இருக்கக்கூடாது. நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தான். எனக்கும் இந்து கடவுள் மீது நம்பிக்கை உண்டு. நானும் விநாயகர் கோயிலுக்கு செல்பவன் தான். ஆனால், இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், புதுச்சேரி மாநில மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது, ஊர்வலம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கு மக்கள் அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.
ராஜீவ் காந்தியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நாம் கடைபிடித்து இந்திய நாடு மேலும் வளர பாடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவியை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சில விஷமிகள், சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகின்றவர்கள் எல்லாம் பிரியங்கா காந்தி ஒரு வருடத்துக்கு முன்பு சொன்ன கருத்தை இப்போது கொண்டு வந்து காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தலைவராக இருக்க மாட்டார்கள் என்பதை, காந்தி குடும்பத்தைச் சேராதவர்கள் தலைவராக வர வேண்டும் என்று பிரியங்கா காந்தி சொன்னதாக திரித்து கூறுகின்றனர்.
இப்படி அரசியலில் பச்சோந்தியாக செயல்படுகின்றவர்களை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும். அதனை யார் செய்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவதற்கு அனைவரும் இணைந்து பாடுபட்டோம். தென்மாநிலங்கள் எல்லாம் அவர் பக்கம் நின்றன. வடமாநிலங்கள் கைகொடுக்கவில்லை. எனவே, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அவரது செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன. பாஜக ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து நாட்டில் எதேச்சதிகார ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை வாட்டுகின்ற ஆட்சி நடைபெறுகிறது. ஆகவே, அதை எதிர்த்து குரல் கொடுக்கும் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக ராகுல் காந்தி அகில இந்திய தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்"
இவ்வாறு அவர் கூறினார்.