புதுச்சேரியில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா தொற்று: புதிதாக 554 பேர் பாதிப்பு; மேலும் 8 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் இன்று புதிய உச்சமாக 554 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், புதுச்சேரியில் 7 பேர், ஏனாமில் ஒருவர் என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 12 ஆம் தேதி முதல் தினமும் 300 பேருக்கு மேல் தொற்றினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஆக.20) இதுவரை இல்லாத புதிய உச்சமாக 554 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கையும் 137 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,388 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 484 பேர், காரைக்காலில் 35 பேர், ஏனாமில் 35 பேர் என புதிதாக 554 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒரே நாளில் 500-க்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வாழைக்குளம் முருகேசன் கிராமணி தோட்டம் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி, பேட்டையன்சத்திரம் சிவசடையப்பர் கோயில் தெருவை சேர்ந்த 55 வயது பெண், முதலியார்பேட்டை கடலூர் ரோட்டை சேர்ந்த 84 வயது முதியவர், முத்தியால்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த 48 வயது ஆண், தருமாபுரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை லட்சுமி நகர் விரிவாக்கம் பாரதிதாசன் வீதியை சேர்ந்த 56 வயது ஆண் ஆகிய 6 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், முதலியார்பேட்டை தேங்காய்த்திட்டு வடக்கு பேட் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த 54 வயது ஆண் நபர் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஏனாம் ஜெயில் வீதியை சேர்ந்த 62 வயது முதியவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 16 ஆம் தேதி முதல் ஏனாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 9,292 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,602 பேர், காரைக்காலில் 87 பேர், ஏனாமில் 36 பேர் என 1,725 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,627 பேர், காரைக்காலில் 86 பேர், ஏனாமில் 81 பேர், மாஹேவில் 2 பேர் என மொத்தம் 1,796 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,521 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 259 பேர், காரைக்காலில் 34 பேர், ஏனாமில் 29 பேர் என மொத்தம் 322 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,634 (60.63 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 59 ஆயிரத்து 757 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 48 ஆயிரத்து 902 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
