

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் (கிசான் சம்மான்) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் பேர் முறைதவறி பணம் பெற்றது தெரியவந்தது.
இந்நிலையில் வேளாண் உதவி இயக்குநர் அசோகன் தலைமையிலான அதிகாரிகள், 2 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: சமீபகாலமாக சிலர் தரகர்போல செயல்பட்டு நிலமற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ‘பிரதமரின் கிசான் சம்மான் போர்ட்டலில்’ விண்ணப்பித்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முறைகேடு செய்திருப்பதாக தெரிகிறது.
புதிய பயனாளிகள் சேர்க்கைப்பதிவுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வேளாண், வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு போலி பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு விவசாய நிதியுதவி வழங்கப்பட்டு இருந்தால் திரும்ப பெறப்படும். இம்மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலமில்லாத விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்காது.
ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டோர்விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடாகச் சேர்ந்து இருப்போரை திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.