கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம், பி.காம் பாடங்களில் சேர மாணவர்கள் ஆர்வம்
Updated on
1 min read

அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், பி.காம் போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நகர்ப்புறங்களைப் போன்று கிராமங்களிலும் பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்வியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.

தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினம் போன்ற காரணத்தால் பொறியியல் மோகம் மலிந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

பட்டம் பெற்றுவிட்டால் போட்டித் தேர்வெழுதி அரசு வேலைக்கு சென்றிடலாம் என நம்புகின்றனர்.

குறிப்பாக பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், பி.ஏ ஆங்கிலம், தமிழ் இலக்கியம் படித்து, பிஎட் முடித்தால் அரசு, தனியார் பள்ளிகளில் வேலைக்கு போகலாம் என, மாணவியர்களை பெற்றோர் தயார் படுத்துகின்றனர்.

இது போன்ற நம்பிக்கையால் மேற்கண்ட பாடப்பிரிவுகள் இவ்வாண்டு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கரோனா ஊரடங்கால் ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடை முறைப்படுத்திய நிலையில், ஏற்கெனவே அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏறக்குறைய முடிந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கத் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாண்டு ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 2 அல்லது 3 மடங்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், இவற்றில் குறிப்பாக பிஏ ஆங்கிலம், பிகாம், கணிதம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்ததாகவும் கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எதிர்பார்த்த அளவில் ஆங்கில இலக்கியம், பிகாம் போன்ற விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள், வேறு வழியின்றி சுயநிதி பிரிவுகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.

அதிலும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்ததால் பி.காம் போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆர்வம் அதிகரித்தது. கட்டணம் அதிகரிப்பால் அரசுக் கல்லூரிகளை எதிர்பார்த்துள்ளனர்.

ஊரடங்கு போன்ற சூழலால் பொருளாதார சூழலால் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர திட்டமிட்ட மாணவர்களும் கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் சாய்ந்ததால் விண்ணப்பங்கள் அதிகரித்ததாக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

தியாகராசர் கல்லூரி முதல்வர் பாண்டிராஜன் கூறுகையில், ‘‘கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போதும் போன்று அதிகரித்தாலும், பிகாம், பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், தமிழ், ஆங்கில இலக்கியப் பாடங்களுக்கான தேவை வழக்கம் போன்று அதிகரித்துள்ளது.

எங்களது கல்லூரியில் பிகாம் ஹானஸ், பிபிஎஸ் போன்ற புதிய பாடப்பிரிவுகளிலும் மாணவர்களை சேர்த்துள்ளோம். ஊரடங்கால் மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கும் நிர்வாகங்கள் தயாராகும்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in