

புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். புதிதாக 370 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,396 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக. 18)கூறும்போது, "புதுச்சேரியில் 1,106 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 317 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 2 பேர் என 370 பேருக்குத் (33.45 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 9 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி முல்லா வீதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 53 வயது ஆண் நபர், உறுவையாறு ஜெயராம் நகரை சேர்ந்த 39 வயது ஆண் நபர் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர்.
மூலக்குளம் மோதிலால் நகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்த 62 வயது ஆண் நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். வைசியால் வீதியை சேர்ந்த 79 வயது முதியவர், திலாஸ்பேட்டை மருதம் நகரை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
சுத்துகேணி மெயின் ரோட்டை சேர்ந்த 48 வயது ஆண் நபர் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்த 60 வயது மூதாட்டி பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பரிசோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 52 வயது ஆண் நபருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8,396 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,596 பேர், காரைக்காலில் 87 பேர், ஏனாமில் 60 பேர் என 1,743 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் 1,499 பேர், காரைக்காலில் 85 பேர், ஏனாமில் 34 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 1,621 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று அதிகபட்சமாக புதுச்சேரியில் 205 பேர், காரைக்காலில் 34 பேர், ஏனாமில் 43 பேர் என மொத்தம் 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,909 பேர் (58.47 சதவீதம்) அதிகரித்துள்ளது.
இதுவரை 57 ஆயிரத்து 25 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 47 ஆயிரத்து 202 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 709 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் 2,539 பேர் பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 12 ஆம் தேதி அதிகபட்சமாக 481 பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, தினமும் 300 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 370 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் 2,539 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லாமல் 51.81 சதவீதம் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே காலாப்பட்டில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.