

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.20 கோடியே 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.20 கோடியே 10 லட்சத்தில் 84 ஆயிரத்து 592 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபத்தை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
மேலும், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பிரளயகாலேசுவரர் கோயில், திருத்தணி வட்டம், ஆற்காடு குப்பம், சோளீஸ்வரர் சுவாமி கோயில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் ஆகியவற்றில் ரூ.1 கோடியே 53 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 59 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.