

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 384 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 2 பேர், ஏனாமில் 2 பேர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.16) கூறும்போது, "புதுச்சேரியில் 1,012 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 372 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 5 பேர் என மொத்தம் 384 பேருக்குத் (37.94 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 2 பேர், ஏனாமில் 2 பேர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி ராகவேந்திரா நகர் ஐயனார் கோயில் வீதியை சேர்ந்த 43 வயது ஆண் நபர் 14 ஆம் தேதி ஜிப்மருக்குக் கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது.
தேங்காய்த்திட்டு மேட்டு தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்குக் கடந்த 6 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், ஏனாம் எஸ்.பி.வீதியை சேர்ந்த 58 ஆண் நபருக்குக் கடந்த 27 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் ஏனாமை சேர்ந்த 67 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆம் தேதி ஏனாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.42 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 7,732 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,407 பேர், காரைக்காலில் 113 பேர், ஏனாமில் 63 பேர் என 1,583 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,437 பேர், காரைக்காலில் 75 பேர், ஏனாமில் 81 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 1,596 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று அதிகபட்சமாக புதுச்சேரியில் 170 பேர், காரைக்காலில் 38 பேர், ஏனாமில் 11 பேர் என மொத்தம் 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,443 (57.46 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54 ஆயிரத்து 852 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 45 ஆயிரத்து 803 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 695 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 44.25 சதவீதம் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.