

‘பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குவது, நினைவு நாளுக்கு மாலை அணிவிப்பது என்ற சடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம்’ என்று காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் தனது விசுவாசிகளுக்கு வாட்ஸ்அப் வழியே ஆடியோ தகவல் அனுப்பி இருக்கிறார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் கடந்த இரண்டு வார காலமாக, சென்னையில் உள்ள தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஒன்றரை மணி அளவில் அவர் தனது விசுவாசிகளுக்கு வாட்ஸ்அப் வழியே குரல் பதிவு ஒன்றை அனுப்பி இருக்கிறார் . இரண்டு நிமிடம் ஒரு வினாடி மட்டுமே ஓடக்கூடிய அந்தப் பதிவில் இருப்பது இதுதான்;
‘வணக்கம் நண்பர்களே... நாளையோட ரெண்டு வாரம் ஆயிடும் எனக்கு டெஸ்ட் எடுத்து. இப்ப நான் நல்லாதான் இருக்கேன். திங்கள் கிழமையிலிருந்து நான் மீண்டும் என்னுடைய அலுவல் பணியைத் தொடங்கி விடுவேன் என்று முழுமையாக நம்புகிறேன். உங்களுடைய நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகளுக்கு நன்றி.
தனிமையில் இருந்ததால இந்த ரெண்டு வாரத்துல நான் பல விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்திருக்கிறேன். குறிப்பாக, நமது நாட்டிலே உள்ள அரசியல் நிலைமை, தமிழ்நாட்டின் அரசியல் போக்கு, நம்முடைய கட்சி இருக்கும் நிலை இதெல்லாமே எனக்கு திருப்தி அளிக்குதுன்னு சொல்லமுடியாது. நம்ம கட்சி போற போக்கு... நாம இன்னும் வாடிக்கையான சடங்கு அரசியல்தான் பண்ணிக்கொண்டிருக்கிறோமே தவிர மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு ஒரு நவீன இயக்கமாகச் செயல்படவில்லை என்பதுதான் எனக்குள்ள பெரிய வருத்தம்.
வரும் காலகட்டத்திலே என்னுடைய கருத்துக்களை இன்னும் ஆழமாப் பதிவுசெய்ய இருக்கிறேன். நான் சொல்வது என்றைக்குமே கொஞ்சம் வாடிக்கைக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கும். ஏதோ... பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குறது, அப்புறம்... நினைவு நாள் அன்னிக்கி மாலை போடுறது, சுதந்திரத்தன்னிக்கி ஸ்வீட் குடுக்குறது; கொடியேத்துறது இந்த சடங்கு அரசியலைத் தாண்டி செயல்பட்டால்தான் தமிழ்நாட்டில் நமக்கொரு எதிர்காலம் இருக்கும்.
என்னால் முடிந்ததை என்னிக்கும் நான் செய்யத் தயாராய் இருக்கிறேன். ஆனால், நான் செல்லும் பாதையில் எல்லோரும் வருவார்களா... என்னுடைய கருத்துகளுக்கு வரவேற்பு இருக்குமா இருக்காதா என்றெல்லாம் எனக்கு இன்னிக்குச் சொல்லத் தெரியாது. ஆனா, என்னுடைய முயற்சி கண்டிப்பா இருக்கும். மீண்டும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றிகளும் உங்களுக்கு’
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். ஏற்கெனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்குக் கார்த்தி சிதம்பரம் அடிபோடுவதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில் அவரது இந்த ஆடியோ பதிவு, தமிழகக் காங்கிரஸ் வட்டாரத்தில் லேசான அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.