

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அவரது மகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி. இந்தியாவில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். அவர் கரோனாவில் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது.
பிரணாப் முகர்ஜிக்கு தற்போது 84 வயது ஆகிறது. இந்நிலையில் டெல்லியிலுள்ள, தனது வீட்டுக் கழிவறையில் அவர் வழுக்கி, கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. தற்போது ஐசியூ பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.
உடல் மூப்பு, அறுவை சிகிச்சை மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அவரது மகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“இன்று (13-8-2020), திமுக தலைவர் ஸ்டாலின், உடல்நலக் குறைவு மற்றும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்து அறிந்தார்.
அப்போது, பிரணாப் முகர்ஜி விரைந்து நலம்பெற வேண்டும் எனும் தமது விழைவினைத் தெரிவித்த திமுக தலைவர், மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் மீது, தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்”.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.