

மதுரை நகரில் காவல் ஆணையரின் உத்தரவின்படி, குற்றச் செயல்களைத் தடுக்க, ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய குற்றவாளிகளின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறது.
சமீபத்தில் மதுரை நகர் காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிரேமானந்த் சின்கா சட்டம், ஒழுங்கு , குற்றச் சம்பவங்களை தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும், சென்னையில் பணியாற்றிய அனுபவங்கள் அடிப்படையில் சிசிடிவி உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியில் நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியிருந்தார்.
அவரது உத்தரவின்படி ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய குற்றச் செயல்கள், நிலுவை வழக்கு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அவர்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறது.
ஏற்கெனவே குற்றச்செயல் புரிந்தவர்களிடம், எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என, சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் மூலம் பத்திரம் ஒன்று எழுதி வாங்கப்படுகிறது.
இதற்கிடையில் அவர்கள் குற்றம் புரிந்தால் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே குற்றச்செயல் புரிந்தவரா, வழக்கு நிலுவையில் உள்ளதா என சந்தேக நபர்களின் முகம் மூலம் கண்டறியும் புதிய செயலி ஒன்றை நகர் காவல்துறையினர் பதிவிறக்கம் செய்து, நடைமுறைப்படுத்த காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது: வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க, ஆணையர் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார்.
மதுரையிலுள்ள தீவிர செயல்பாட்டிலுள்ள (ஆக்டிவ்) ரவுடிகள் பட்டியல், வழிப்பறி, கொள்ளை, கன்னக்கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களை வகைப்படுத்தி பட்டியல் தயாரித்து கண்காணிக்கிறோம்.
சிறைக்குள் இருந்து கொண்டே தங்களது கூட்டாளிகளை வெளியில் இயக்குபவர்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
குற்றச்செயல் புரிந்தவர்களின் முகம், புகைப்படம் வாயிலாக எளிதில் கண்டறியும் காப்ஸ்-ஐ (cops eye) எனும் புதிய செயலியை காவல்துறையினர் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கண்காணிக்கின்றனர்.
இதன்மூலம் ஏற்கனவே குற்றச் செயல் புரிந்தவர்கள் குறித்த 12 விதமான விவரங்கள் அடிப்படையில் அவர்களைg கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்ட இடத்தில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் பணியில் உள்ளனரா எனக் கண்டறிய உதவும் ‘இ-பீட் (e beat) ’ என்றொரு மற்றொரு மொபைல செயலியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.