நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், திருமணம் உள்ளிட்ட அனைத்து தனி நபர் நிகழ்ச்சிகளுக்குக்கும் அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அளிக்கத் தயார் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வர் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிடுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக தேவைக்கேற்ப பேருந்துக் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது முதல்வர் ஜூலை 30 அன்று விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கினை வரும் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது 50 சதவீதப் பணிகளுடன் செயல்படும் அனைத்துத் தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களைக் குழுவாக அழைத்து வருவதற்கும் மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி (CONTRACT CARRIAGE ) அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் tnexpress16@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் 94450 14402, 94450 14416 மற்றும் 94450 14463 என்ற கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்”.

இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in