

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறைகளுக்கு ரூ.56,914 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டு 1026 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இதுவரை 1227 பணிகள் ரூ.2,491 கோடியில் எடுக்கப்பட்டு, அவற்றில் 1123 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
தொழில் முனைவோரும், மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் ரூ.104 கோடியில் 30 முதல்வர் படைப்பகங்கள் தமிழகம் முழுதும் உருவாக்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்கள், குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.6045 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஊரக வளர்ச்சி: தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை அமைத்து குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 29 ஆயிரம் வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 38,62,919 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3397 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1996 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதித் துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சிக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காக 58,211 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டு
மானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 11,054 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கால்நடை, மீன்வளத் துறை: பால் பண்ணைகள் நவீனமயமாக்கலுக்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.758 கோடி செலவிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில்
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 4,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா, அறநிலையத்துறை: கடந்த 5 ஆண்டுகளில் 12,931 கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 4,180 கோயில்களில் குடமுழுக்குகள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 84 கோயில்களில் ரூ.425 கோடியில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகம் அறியப்படாத 22 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.