திருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே புதிய ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே புதிய ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ள திருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அடுத்தகட்டப் பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் எம்.பி ராமசுப்பு கூறும்போது, “திருநெல்வேலி- சங்கரன்கோவில் இடையே ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று மக்களவையில் கோரிக்கை விடுத்தேன்.

இதையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு இத்திட்டத்தின் ஆய்வுக்காக மத்திய அரசு ரூ.5 கோயி ஒதுக்கியது. ஆய்வுப் பணியும் நடைபெற்றது. சங்கரன்கோவிலில் இருந்து வீரசிகாமணி, சுரண்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், மாறாந்தை வழியாக திருநெல்வேலி வரை சுமார் 78 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க சர்வே பணி நடைபெற்றது.

அதன் பிறகு இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த வழியாக ரயில் பாதை அமைத்தால் விவசாயிகள், தொழில் செய்வோர், மாணவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு 2 முறை கடிதம் எழுதினேன். இந்தத் திட்டம் நிலுவையில் இருப்பதாக ரயில்வே கோட்ட மேலாளர் கூறினார். இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, விரிவுபடுத்த வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, “இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள். அருகில் உள்ள ரயில் நிலையங்களை அடைய ஆலங்குளம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இத்திட்டத்தை விரைவுபடுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள், மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தப் பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.

தென்காசி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இத்திட்டத்துக்காக மக்களவையில் குரல் கொடுக்க வேண்டும். மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in