

தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் செலுத்துவதில் குளறுபடி நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் உட்பட 12-க்கும் மேற்பட்ட போக்கு வரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க, கடந்தாண்டு இ-சலான் முறை அமலானது.
விதி மீறலுக்குரிய அபராதத் தொகை டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் வசூலிக்கப் படுகிறது. போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மட்டும் அபராதத் தொகையை குறிப்பிடாமல் இ-சலான் வழங்கி நீதிமன்றத்தில் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆனால், டெபிட், கிரெடிட் கார்டு வசதி இல்லாதோருக்கு விதிமீறல் விவரம் அடங்கிய இ-சலான் வழங்கப்படுகிறது. இதன்மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் எஸ்பிஐ வங்கி, இ-சேவை மையங்கள் அல்லது ஆன்லைனில் உரிய அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் வாகன உரிமம் ரத்து, பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் வாகன ஓட்டிகளை எச்சரிக்கின்றனர். ஆனால், அரசு இ-சேவை மையம், வங்கியில் அபராதத் தொகையைச் செலுத்த முடியாத சூழல் உள்ளது.
இ-சேவை மையங்களில் அலைக்கழிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். தனியார் ஆன்லைன் மையங்களில் அபராதத் தொகை செலுத்த ரூ.30 முதல் 50 வரை சேவைக் கட்டணம் வசூலிக்கின்றனர். சொந்த மொபைல் போன், கணினி மூலம் ஆன்லைனில் செலுத்த முயன்றால் வாகனப் பதிவெண், இன்ஜின், சேசிஸ் எண் போன்ற விவரங்கள் குறிப்பிட வேண்டியுள்ளது. இவற்றைப் பதிவிட்டாலும் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனத்துக்குப் பதிலாக நான்கு சக்கர வாகனத்துக்குரிய விதிமீறல் விவரம் வருகிறது.
இது போன்ற குளறுபடியால் அபராதம் செலுத்த முடிவதில்லை. இதனால் போலீஸாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப் படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அபராதம் செலுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து காவல் துணை ஆணையர் சுகுமாறன் கூறுகையில், கார்டு இன்றி, இ-சலான் பெற்று அபராதம் செலுத்தும் வகையில் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள தேசிய தகவல் தொடர்பு மையம் மூலம் ஒரே மாதிரியான மென்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும். மேலும், தபால் நிலையங்கள் மூலம் அபராதத் தொகை செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். என்.சன்னாசி