

கரோனா அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 2,000 படுக்கை வசதிகளை கொண்டு வருவதற்கான ஆயத்த வேலைகளை செய்து வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஆக.6) கூறியதாவது:
"புதுச்சேரியில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 55 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர். புற்றுநோய், சீறுநீரக நோய், நீரிழிவு நோய், இதய நோய் என பல வியாதிகளில் பாதிக்கப்பட்டிருந்தனர். இது 1.5 சதவீதமாகும். அகில இந்திய அளவை விட குறைவு. அதிக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு எடுத்துத் தொகுதிவாரியாக உமிழ்நீர் பரிசோதனை செய்கிறோம்.
கரோனா தொற்றைக் குறைக்க அதிக மருத்துவ பரிசோதனைகளை செய்கிறோம். இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் தேவை என்று கருத்துப் பதிவு செய்தனர். மருத்துவ சாதனங்களை பழுதுநீக்க நடவடிக்கை கோரினர். கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவில்லை என, அங்குள்ள நோயாளிகள் குறையாக தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றாளர்கள் 90 சதவீதத்தினர் குறைந்த அளவே பாதிப்புடையோராக புதுச்சேரியில் உள்ளனர். பத்து சதவீதத்தினரே நுரையீரல் பிரச்சினை, சுவாசப் பிரச்சினை உடையோராக உள்ளதால் வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. அவர்கள் மீது அதிக அக்கறை கொண்டு கவனிக்கக் கோரியுள்ளேன்.
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை தற்காலிகமாக 3 மாதங்கள் நியமிக்கக் கோப்பு தயாரித்து அனுப்பியுள்ளோம். ஒப்புதல் வந்தபிறகு நியமிக்கப்படுவார்கள். மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.
அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்குக் கரோனா தொற்று முதலில் உறுதியானது. அதையடுத்து அவரும், அவரது குடும்பத்தினரும் உமிழ்நீர் பரிசோதனை செய்து கொண்டனர். அதில், கரோனா தொற்றின் லேசான அறிகுறி அமைச்சர் கந்தசாமி, அவரது மகனுக்கு இருந்தது. அவர்கள் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு நலமாக இருக்கின்றனர்.
60 வயதுக்கு மேற்பட்டோரும், இதர நோய்கள் உடையோரும் சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். தனிமனித இடைவெளியை அனைவரும் கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிய வேண்டும். மருந்து கண்டுபிடிக்கும் வரை தங்களை பாதுகாக்க விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
புதுச்சேரியில் 67 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிக பரிசோதனை செய்வதே கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வுக்குக் காரணம். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனைக்காக புதிய இயந்திரம் வந்துள்ளது. அதனால் மொத்தம் 400 பேருக்குக் கரோனா தொற்றுள்ளதா என பரிசோதனை செய்யலாம். ஜிப்மரில் 900 பேருக்கு செய்யலாம். இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பரிசோதனை தொடங்கியுள்ளனர். இதர மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பரிசோதனை தொடங்க உத்தரவிட்டுள்ளோம்.
இப்போது அதிகப்படியான கரோனா தொற்று இருக்கும் காரணத்தால் நமக்குத் தேவையான படுக்கைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொண்டு வருவதற்கான ஆயத்த வேலையை செய்து வருகிறோம். அதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 2,000 படுக்கை வசதிகளை உருவாக்க முடியும்.
புதுச்சேரிக்கு இம்மாதம் வருமானம் 40 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசு இழப்பீட்டை நான்கு மாதமாக தரவில்லை. 14 சதவீத இழப்பீட்டை தர வேண்டும். ரூ.560 கோடி நிலுவை உள்ளது. அதனை உடனே வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். உடனடியாக அதற்கு முடிவு காண்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஊதியம், மக்கள் நலவாழ்வு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதால் நிதி தர கோரியுள்ளேன்.
வருவாயை உயர்த்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என தலைமைச் செயலாளர், செயலாளர்களை அழைத்துப் பேசினேன். ஏற்கெனவே 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்' மூலம் புதுச்சேரி அரசுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது, மத்திய அரசு எவ்வளவு நிதி நமக்குக் கொடுக்க வேண்டும் என்பதை கணக்கெடுத்து பார்த்தோம். இப்போது, ரூ.1,700 கோடி நிதி தருகிறார்கள். ரூ.2,900 கோடி நிதி தர வேண்டும். பட்ஜெட்டில் 41 சதமாகும். அந்த அறிக்கையை மத்திய நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதி, வசூல் செய்த வருவாயில் 41 சதவீதத்தை தர கடிதம் எழுதினேன். இதுவரை பதில் வரவில்லை. தற்போது 21 சதவீதம்தான் தருகிறார்கள்.
துறைவாரியாக வருவாய் வருவதையும் உயர்த்துவது தொடர்பாக மாநில அரசுக்கு விரைவில் 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்' குழு தரவுள்ளது. குறுகிய காலத்தில் மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்"
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.