

பாஜகவும் அது சார்ந்த இந்துத்துவ அமைப்புகளும் அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டும் தங்களது நீண்ட கால லட்சியத்தை நேற்று தொடங்கிவிட்டன. இன்னும் மூன்றே ஆண்டுகளில் அயோத்தியில் ஒரே சமயத்தில் ஐம்பதாயிரம் பேர் தரிசிக்கக் கூடுமளவுக்குப் பிரம்மாண்டமான கோயில் ராமருக்காகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும்.
ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பாஜகவும் அதன் சார்பு அமைப்புகளும் தாங்கள் நினைத்தைச் சாதித்து முடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக ராம சேதுவை (ராமர் பாலம்) உலகப் புராதனச் சின்னமாக அறிவித்து அதைப் பாதுகாக்கும் திட்டத்தைக் கையில் எடுக்கத் தயாராகி வருகிறது பாஜக.
இதுகுறித்து ’இந்து தமிழ்’இணையத்திடம் பேசிய ராம சேது பாதுகாப்பு இயக்கத்தின் அகில பாரதச் செயலாளரும் தமிழ் மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் டி.குப்புராமு, “எங்களது செயல் திட்டத்தில் ராம ஜென்ம பூமி விவகாரம்தான் முன்னுரிமையில் இருந்தது. அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதால் அடுத்ததாக எங்களது கவனத்தை ராம சேது (ராமர் பாலம்) மீது திருப்பி இருக்கிறோம்.
இதுகுறித்து எங்களது தலைவர்களிடம் நேற்றே பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டோம். சேது சமுத்திரத் திட்டத்தால் ராம சேதுவுக்கு ஆபத்து வருகிறது என்றதுமே அது தொடர்பான வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர் பராசரனை நாங்கள் அணுகினோம். ஆனால், ‘வழக்கு நடத்தும் அளவுக்கு இதில் போதிய ஆவணங்கள் இல்லை. வெறும் உணர்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு வழக்கை நடத்துவது கஷ்டம்’ என்று சொல்லி வழக்கில் வாதாட மறுத்துவிட்டார் பராசரன். அப்போது, ‘இந்த வழக்கின் ஆவணங்களைத் தொகுத்து நீங்கள் வாதாடத் தகுந்த வழக்காக மாற்றிக் கொண்டு வருவேன். அப்போது நீங்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அதன்படி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ராம சேதுவுக்காக வழக்குத் தொடர்ந்து அங்கிருந்து அதைச் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று வாதாடிக் கடைசியில் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்றோம். ராம சேது பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் 2007-ல் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் சென்றார். இடை மனுதாரராக சுப்பிரமணியன் சுவாமியும் எங்களோடு இணைந்து கொண்டார்.
வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், நான் சொன்னது போலவே பராசரன் வந்து வாதாடினார். எங்களுக்கு நீதி கிடைத்தது. சேது சமுத்திரத் திட்டத்துக்காக ராம சேதுவைத் தகர்க்கும் திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.
இந்த நிலையில், ராம சேதுவைப் பாதுகாக்கும் வகையில் அதை உலகப் புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். நடப்பது பாஜக ஆட்சிதான் என்றாலும் பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர். அரசு என்ன சொல்கிறதோ அதுபடிதான் அவர் நடக்கமுடியும். பாஜக பிரதமர் என்பதால் பாஜகவினர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க முடியாது. அதனால், நாங்கள் வைத்த கோரிக்கையை இன்னும் பரிசீலனை அளவிலேயே வைத்திருக்கிறது மத்திய அரசு.
ராம சேது விவகாரத்தில் நாங்கள் கையாண்ட நடவடிக்கைகளைத்தான் அப்படியே ராம ஜென்ம பூமி விவகாரத்திலும் கையாண்டார்கள். ராம ஜென்ம பூமி வழக்கில் நாங்கள் வெற்றிபெற அதுவும் ஒரு முக்கிய காரணம். இது தொடர்பாக விஎச்பி-யின் அகில உலகப் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் நானே பல சுற்று பேசியிருக்கிறேன்.
இப்போது ராம் ஜென்ம பூமி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதால் அடுத்தது எங்களது இலக்கு ராம சேதுதான். ராம சேதுவை யுனெஸ்கோவுடன் இணைந்து உலகப் புராதனச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி இனி மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்போம். அதேசமயம், ராம சேது உலகப் புராதனச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டால் ராம சேதுவை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எல்லாம் விரிவான திட்ட அறிக்கைகளை நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம். அறிவிப்பு வெளியானதும் அந்தத் திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து ராமேஸ்வரத்தின் மீதும் ராம சேதுவின் மீதும் உலகத்தின் பார்வையைத் திருப்புவோம்” என்றார்.