

கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்புஜ்குமார், உமேஷ்சாகினி, நித்தீஷ்குமார், அசோக்குமார் ஆகிய நான்கு பேரும் திருப்பூர் மாவட்டம் காசிபாளையத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிய இன்று (ஆக.6) அதிகாலை வருகை புரிந்து உள்ளனர்.
தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை வந்த இவர்களை, நிறுவனத்தின் சார்பில் அங்கிருந்து காரில் அழைத்து வந்தனர். திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் ஜெயசந்திரன் என்பவர் காரை ஓட்டி வந்தார். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் மேம்பாலம் அருகே வந்த போது ஓட்டுநரின் கவனக்குறைவால் முன்னால் சென்ற பார்சல் சர்வீஸ் லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பீகாரை சேர்ந்த அம்புஜ்குமார் மற்றும் உமேஷ்சாகினி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த நித்தீஷ்குமார், அசோக்குமார், டேனியல் ஆகிய மூன்று பேரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த இருவர் உடலை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.