

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் அருகே, நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஏ.பி.தாஸ் பதவி வகித்து வந்தார். இவரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஆக.5) நிறைவடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் இடைக்கால துணைவேந்தராக பேராசிரியர் கற்பக குமாரவேல் (பொறுப்பு) பதவி ஏற்றுள்ளார்.
நேற்று மாலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். மேலும், மனித வள மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும், யூஜிசி ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
"ஜனநாயக வழியில் எனது நிர்வாகப் பணி இருக்கும். நடுநிலையுடன் மத்திய பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என கற்பக குமாரவேல் தெரிவித்துள்ளார்.