

கரோனா சமயத்தில் அரசு துறைகள் கடினமாக உழைத்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஆக.4) செய்தியாளர்களிடம் கூறும்போது, "மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான கோப்பு அனுப்பி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. தற்போது அந்த கோப்பு நிதித்துறையில் உள்ளது. முக்கியமான கோப்புகளுக்கு உடனே ஒப்புதல் அளிப்பதில்லை. குறிப்பாக, ஊழியர்கள் நியமனம் தொடர்பாக ஜூலை 7 ஆம் தேதி அனுப்பிய கோப்பு இதுவரை வரவில்லை. கடந்த 31 ஆம் தேதி வரை நிதித்துறையில் கோப்பு இருந்ததுள்ளது. கோப்பு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது.
கரோனா தொற்று சமயத்தில் சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் கடினமாக உழைத்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஒத்துழைப்பு குறைந்துவிட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நானும், முதல்வரும் கூட்டம் நடத்தி, தினமும் என்னென்ன நடவடிக்கை எடுத்தோம், என்னென்ன பற்றாக்குறை உள்ளது என்று கேட்டறிகிறோம்.
அதன்பிறகு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து தனி உத்தரவை போட்டுக் குழப்பதை ஏற்படுத்துகிறார். இதையடுத்து, அதிகாரிகளுக்கு ஆளுநருக்கான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கே நேரம் எல்லாம் போய்விடுகிறது. இதனால் மனக் கஷ்டமாக உள்ளது. இதனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போக முடியாது. எந்த அளவுக்கு செய்ய முடியுமோ, அந்த அளவுக்குப் பணியை செய்கிறோம்.
தினமும் சராசரியாக 160 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏனாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்துவர முடியவில்லை. ஏனாம் மண்டல நிர்வாகி சரியாக செயல்படவில்லை. 'ஒரே ஒரு வாகனம்தான் உள்ளது. படுக்கை இல்லை. இதனால் நோயாளிகளை அழைத்து வர முடியவில்லை' என்கிறார்.
படுக்கை இல்லையென்றால், நானே படுக்கைகளை வாங்கி கொடுக்கிறேன் என்றேன். கரோனா சமயத்தில் அதிகாரிகள் நேரம் பார்க்காமல் வேலை செய்யாவிட்டால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி மருத்துவமனைக்கு அழைத்துவர முடியும்.
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால், ஏனாமில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. அங்கு 50 நோயாளிகளை மட்டுமே அனுமதிக்க முடியும். மேலும், அங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியை மருத்துவமனையாக மாற்றி உள்ளேன். அதன்பிறகு, மாணவர் விடுதி, மாணவி விடுதிகளையும் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.
ஆனால், போதிய ஆட்கள் இல்லை. படுக்கை வசதி இல்லை. இதுபோன்ற சூழல் உள்ளது. பொதுமக்கள் சரிவர முகக்கவசம் அணிவதில்லை. தனிமனித இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை.
இதேபோல் பொதுமக்கள் இருந்தால் ஆகஸ்ட், செப்டம்பரில் பாதிப்பு அதிகமாகி விடும். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் புதுச்சேரியில் கரோனா தொற்று கொஞ்சம் கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் மற்ற மாநிலங்களை போல் புதுச்சேரி நிலை மாறிவிடும்.
எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கு மேல் புதுச்சேரி அரசு என்ன செய்ய முடியும் என்பதையும் மக்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.