

புதுச்சேரியில் இன்று புதிதாக 168 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிப்மரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,146 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.4) கூறும்போது, "புதுச்சேரியில் 812 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 163 பேர், காரைக்காலில் 5 பேர் என மொத்தம் 168 (20.7 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 46 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 52 பேர் ஜிப்மரிலும், 2 பேர் 'கோவிட் கேர் சென்ட'ரிலும், 5 பேர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக காத்திருப்பில் உள்ளனர்.
மேலும், லாஸ்பேட்டை பெத்துச்செட்டிபேட்டை சுப்ரமணியர் கோயில் வீதியை சேர்ந்த 55 வயது பெண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் மற்றும் இருமல், சளியுடன் நேற்று ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
எனவே கரோனா தொற்று உள்ளவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டோ, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டோ மருத்துவமனைக்கு வராமல் லேசான அறிகுறி இருக்கும் போதே மருத்துவனையை நாடுவது நல்லது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை இதுவரை 4,146 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 259 பேரும், ஜிப்மரில் 381 பேரும், 'கோவிட் கேர் சென்ட'ரில் 286 பேரும், காரைக்காலில் 59 பேரும், ஏனாமில் 134 பேரும், மாஹேவில் ஒருவரும் என 1,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் 346 பேர், ஏனாமில் 23 பேர் என 369 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக காத்திருப்போர் 63 பேரையும் சேர்த்து மொத்தம் 1,552 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 31 பேர், ஜிப்மரில் 11 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 40 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 11 பேர் என மொத்தம் 96 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 42 ஆயிரத்து 322 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 37 ஆயிரத்து 719 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 127 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.