ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்: ஒருநாள் சம்பளம் பிடித்தம் என உத்தரவு; அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை; கே.எஸ்.அழகிரி கண்டனம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
Updated on
2 min read

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தைப் பிடிக்கும் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு தனிமனித விலகல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு இருந்து வருகின்றது. பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தமிழக அரசுக்கு உணர்த்துகிற வகையில் தனிமனித விலகலை கடைபிடித்து போராட்டங்களை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.

கடந்த ஜுலை 7 ஆம் தேதி ஓய்வு பெறும் வயதை அறுபதாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சமூக நலத்துறை ஆணையர், சங்கத்தினருக்கு எழுதிய கடிதத்தில் மனித நடமாட்டத்திற்கு தடை விதிக்கபட்டிருந்த நிலையில், அரசு விதிமுறைகளை மீறி கடந்த 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு பணியாளர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பாக போராட்டம் ஏன் நடத்தப்படுகிறது என்பதை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்பே சமூக நலத்துறை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இது குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, தீர்வு காணும் முயற்சிகளோ நடைபெறவில்லை.

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக் குறித்து சமூக நலத்துறை செயலாளர் சங்கத்தினரை அழைத்து பிரச்சினையை பேசி தீர்க்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை விட ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த பொது ஊரடங்குக்கு உட்பட்டு தனிமனித விலகலை கடைபிடித்து ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் செயலாகும். ஏற்கெனவே சொற்ப ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது எந்த வகையிலும் நியாயமான செயலாக இருக்க முடியாது.

எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தைப் பிடிக்கும் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல கரோனா பாதிப்பு காரணமாக பொது ஊரடங்கு இருந்தாலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மக்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளாக முன்வைத்து தனிமனித விலகலை கடைபிடித்து நடத்தப்படுகிற போராட்டங்களை ஒடுக்குகிற வகையில் காவல்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in