புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 200 பேருக்கு கரோனா தொற்று;  மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்வு  

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 200 பேருக்கு கரோனா தொற்று;  மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்வு  
Updated on
2 min read

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று(ஆகஸ்ட் 2) ஒரே நாளில் 200 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3, 806 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, ‘‘புதுச்சேரில் 886 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் 161 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 32 பேர் என மொத்தம் 200 (22.6 சதவீதம்) பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாஹேவில் யாருக்கும் தொற்று இல்லை.

இதில் 42 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியிலும், 28 பேர் ஜிப்மரிலும், 3 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 7 பேர் காரைக்காலிலும், 32 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 88 பேர் படுகைகள் இல்லாததால் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக காத்திருப்பில் உள்ளனர். புதுச்சேரி பங்கூர் கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 24 ஆம் தேதி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், மோசமான சுவாச கோளாறு பிரச்னை ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,806 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் 333 பேரும், ஜிப்மரில் 321 பேரும், கோவிட் கேர் சென்டரில் 292 பேரும், காரைக்காலில் 51 பேரும், ஏனாமில் 118 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 231 பேர், ஏனாமில் 11 பேர் என 242 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 88 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபிறகு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1445 ஆக உள்ளது.

இன்று மட்டும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 30 பேர், ஜிப்மரில் 26 பேர், கோவிட் கேர் சென்டரில் 42 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 3 பேர் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பேர் என மொத்தம் 111 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,309 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கதிர்காமம் மருத்துவ கல்லூரி மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 20 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 40 ஆயிரத்து 652 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 36 ஆயிரத்து 142 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. 440 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது’’எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in