

மதுரையில் போலி இ-பாஸ் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீஸார், மாவட்ட நிர்வாகம் விசாரிக்கின்றனர்.
கரோனா தடுப்புக்கான பொது ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் வெளியில் வருவதைத் தடுக்க, ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வின்றி முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கு இ- பாஸ் அவசியம் என்ற நிலை தொடர்கிறது. அத்தியாவசியத் தேவை, திருமணம், துக்க நிகழ்வு போன்ற அவசரத்திற்கு ஆன்லைன் மூலம் இ- பாஸ்-க்கு விண்ணப்பிக்கவேண்டும்.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்போது, சில நேரத்தில் இ-பாஸ் கிடைக்கிறது. ஆனாலும் மருத்துவம் உள்ளிட்ட சில அவசர தேவைக்கு செல்வதற்கு தகுதி இருந்தும் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தும் இ-பாஸ் கிடைக்காத சூழலும் உருவாகிறது.
அதே நேரத்தில் சிலர் குறுக்கு வழியில் இ- பாஸ் பெற முடிகிறது என்ற புகார் மதுரையில் எழுந்துள்ளது. சில தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் இ- பாஸ்களை பணம் கொடுத்து தங்களது சொந்த வாகனங்களில் வெளியூர்களுக்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுத்திருக்கிறது.
ரூ.4 ஆயிரம் பணம் ஆதார் நகல் மட்டுமே கொடுத்தால் குறைந்தது 30 நிமிடங்களில் போலி இ- பாஸ் கிடைக்கும் சூழல் மதுரையில் சில இடங்களில் நடப்பதாகக் கூறப்படுகிறது.
கோவைக்கு செல்ல ரூ. 1000 முதல் ரூ.1,500 வரையிலும், சென்னைக்கு செல்ல வேண்டுமெனில் ரூ. 2,500 வரை இ-பாஸ்-க்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது.
குறுக்கு வழியில் இ- பாஸ் பெறுவதன் மூலம் அவசரத் தேவைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு வழங்கும் இ- பாஸ் போன்று இருப்பதால் அரசு அதிகாரிகள் மூலம் பெற்று தருகிறார்களா அல்லது பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக தயாரிக்கப்படுகிறதா என, விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுத்துள்ளது.
இது தொடர்பான புகாரும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேகிக்கும் டிராவல்ஸ் நிறுவனங்கள், மளிகைக் கடைகளை ரகசியமாகக் கண்காணித்து விசாரிப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.