புதுச்சேரியில் ஒரே நாளில் 174 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 49 ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

புதுச்சேரியில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 174 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,467 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 31) கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 973 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தற்போது புதச்சேரியில் 135 பேர், காரைக்காலில் 13 பேர், ஏனாமில் 26 பேர் என மொத்தம் 174 (17.9 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் 83 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 44 பேர் ஜிப்மரிலும், 8 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 13 பேர் காரைக்காலிலும், 26 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 56 வயதுப் பெண் ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 23 ஆம் தேதி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

மோகன்குமார்: கோப்புப் படம்.
மோகன்குமார்: கோப்புப் படம்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,467 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 380 பேர், ஜிப்மரில் 353 பேர், கோவிட் கேர் சென்டரில் 286 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 73 பேர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், புதுச்சேரியில் 167 பேர், ஏனாமில் 11 பேர் என 178 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகபட்சமாக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 86 பேர், ஜிப்மரில் 42 பேர், கோவிட் கேர் சென்டரில் 8 பேர், காரைக்காலில் 6 பேர் என மொத்தம் 142 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,095 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 67 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை 38 ஆயிரத்து 734 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 34 ஆயிரத்து 606 பரிசோதனைகளின் முடிவு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 441 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in