

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூலை 30) தன் ட்விட்டர் பக்கத்தில், "2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற சுமார் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கப்படாத நிலையில், அவர்கள் பெற்ற 7 ஆண்டுகளுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பேராசிரியர் பணிக்கான எஸ்.எல்.இ.டி (SLET), நெட் (NET) போன்ற தகுதித் தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாவதைப் போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன், அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதுதான் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும்" என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.