

புதுச்சேரியில் தேவையான மருத்துவர், செவிலியர் மற்றும் ஆஷா பணியாளர்களை நியமிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூலை 28) கூறும்போது, "கடந்த 4 தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இழப்பு அவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அவரின் இறப்பை தாங்கக் கூடிய சக்தியை இறைவன் வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் மருத்துவத்துறையின் வேலை பளு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நோயாளிகள் அதிகமாக வருவதால் தேவைப்படுகின்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்களை நியமிக்கக் கோப்புகளை தயார் செய்து அனுப்பினார். நானும் அதற்கு உத்தரவிட்டுள்ளேன். வெகு விரைவில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உமிழ்நீர் பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உமிழ்நீர் பரிசோதனை செய்தபிறகு அங்குள்ளவர்கள் 2 நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, அந்தந்த மையத்திலேயே மருத்துவ பரிசோதனை உபகரணங்ளை வைத்து பரிசோதனை செய்ய ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் ஜிப்மரில் 1,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 250 - 300 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் 600 பேர், ஜிப்மரில் 100 பேர், காரைக்கால், மாஹே, ஏனாமில் தேவைக்கேற்ப மருத்துவ பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் ஒரு வாரத்தில் வாங்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் பரிசோதனையை ஆரம்பிப்போம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நமக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக, மகாத்மா காந்தி, பிம்ஸ் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் குறைவான அளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதிகப்படியான பரிசோதனைகள் செய்வதற்கு அவர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் சுமார் 700 பேருக்கு பரிசோதனை செய்வதற்கான மையத்தை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 1,500 முதல் 2,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய எங்கள் அரசு ஏற்பாடு செய்து வருகிறோம்.
தேவையான படுக்கைகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தலைவர் என்னை சந்திக்க வந்தார். அவரிடம் நான் பேசும்போது இப்போது 250 படுக்கைள் கொடுக்கிறீர்கள். அது போதாது. 500 படுக்கைகளை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். ஒருபுறம் கரோனா தொற்று பாதித்தவர்கள் அதிகளவில் வரும் காரணத்தால் தேவையான மருத்துவகள், செவிலியர்கள், படுக்கைகள், உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டிய கடமை பொறுப்பு எங்களுடைய அரசுக்கு உண்டு.
அதற்காகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் படுக்கைகளை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளோம். புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கிறோம். தேவைப்பட்டால் தனியார் உணவகங்களிலும் கரோனா தொற்று உள்ளவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஆர்டி-பிசிஆர் 'கிட்', 15 நிமிடம், 30 நிமிடங்களில் முடிவு கிடைப்பதற்கான 'கிட்' உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் நம்முடைய அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி தேவையான உபகரணங்கள், பணியாளர்களை வைத்து மக்களை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் பாடுபட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநரை அழைத்துப் பேசினேன். அதிகப்படியான மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான தேவையான 'கிட்', உபகரணங்கள், மருத்துவ இயந்திரங்கள் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினர்.
மாநில அரசு கரோனாவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மருத்துவத் துறை சிறப்பாக பணிபுரிகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதுமட்டும் போதாது. மக்களின் பங்கு இதில் மிக முக்கியம். புதுச்சேரி மக்கள் தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மாநிலத்தில் கரோனாவை முழுமையாக ஒடுக்க முடியும்.
எப்போது மருந்து வரும் என்று தெரியவில்லை. அதுவரும் வரை நாம் கரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதுச்சேரி மாநில மக்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சாலை அதிபர்கள், தொழிலாளர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது கரோனாவை ஒழிக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அதற்கு தொடர்ந்து அரசோடு ஒத்துழைக்க வேண்டும்" என தெரிவித்தார்.