

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முருகன், முத்துராஜுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31). ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. வழக்கு தற்போது சிபிஐ வசம் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதியானது. அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரை சிபிஐ அலுவலக அதிகாரிக்கும் கரோனா தொற்று உறுதியானது. அதிகாரிகள் 6 பேருக்கு கரோனா உறுதியானதால் விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், வழக்கில் தொடர்புடைய காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கழுத்துவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.