

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இடது கையில் பாதிப்பு இருப்பதால் மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து, சாத்தான்குளத்துக்கு அழைத்துச் சென்றும், மதுரை சிபிஐ அலுவலகத்தில் வைத்தும் விசாரித்தனர்.
இந்த நிலையில் முதுகு தண்டவடப் பிரச்னையால் சிகிச்சை தேவை என, ஆய்வாளர் ஸ்ரீதர் சிறை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். ஏற்கெனவே சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ ஆவணம் இருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையில் கடந்த 22-ம் தேதி மதுரை மத்திய சிறையில் கைதிகளை பரிசோதித்த எலும்புச் சிகிச்சை மருத்துவரிடம் தனக்கு கழுத்தின் பின் பகுதியில் வலி இருப்ப தாக ஸ்ரீதர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க, மருத்துவர் பரிந்துரைத்தார். இதன்பின், 23-ம் தேதி ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. கழுத்து வலிக்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுகுத்தண்டு வடம், பின்பக்க கழுத்து வலி தொந்தரவால் வழக்கம் போல் இன்றி, அவரது இடது கை மதமதப்புடன் இருப்பதாகவும், இதற்காக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் அரசு மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
சிறைத்துறையினர் கூறுகையில், ‘‘ ஸ்ரீதருக்கு கழுத்து வலிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது கை பாதிப்பு விவரம் குறித்து தெரியாது. தேவைப்படும் பட்சத்தில் அவரது உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் சான்றிதழ் பெறுவோம்,’’ என்றனர்.