

கடந்த ஜூன் மாத ஓய்வூதியத்தைப் புதுச்சேரி அரசு ஜூலை மாதம் கடைசி வாரம் ஆகியும் தராததால் புதுச்சேரியில் 1.54 லட்சம் முதியோர், விதவைகள் மற்றும் திருநங்கைகள் தவித்து வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று பேரிடரால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் நோய்த்தொற்றுப் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் செய்த போதிலும் பலதரப்பட்ட மக்களும் வருமானமின்றித் தவித்து வருகின்றனர்.
இச்சூழலில் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர் என அரசு ஓய்வூதியம் பெறும் 1.54 லட்சம் பேருக்குக் கடந்த ஜூன் மாதத்துக்கான ஓய்வூதியம் ஜூலை மாதத்தில் இதுவரை புதுச்சேரியில் தரப்படவில்லை.
பட்ஜெட் அனுமதிக்குப் பிறகே ஓய்வூதியம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கடந்த 20-ம் தேதி தாக்கலாகி கடந்த 25-ம் தேதியன்று நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஓய்வூதியம் இன்று தங்களுக்கு வந்துள்ளதா என்று வங்கிகளுக்குச் சென்று முதியோர்கள் பலரும் பார்த்தனர். ஆனால், ஓய்வூதியம் வரவில்லை.
இது தொடர்பாகத் துறை அமைச்சர் கந்தசாமியிடம் கேட்டதற்கு, "பட்ஜெட் கடந்த வாரம்தான் தாக்கலானது. முதியோர், விதவைகள் உள்ளிட்டோருக்குத் தரப்படும் உதவித்தொகை இந்த வாரத்துக்குள் தரப்படும். ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களுக்கான ஓய்வூதியத் தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என்று குறிப்பிட்டார்.